2014-05-17 16:16:19

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு சிந்தனை


அன்பு நெஞ்சங்களே, இவ்வெள்ளியன்று இந்தியத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கணிப்புக்கள், கணக்குகள் அனைத்தையும் தாண்டி, உண்மைகள் வெளிவந்தபோது, அதிர்ச்சிகளும், ஏமாற்றங்களும் ஒருபுறம், அளவற்ற ஆனந்தம் மறுபுறம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியத் தாயின் கழுத்தை நெரிக்கும் கேள்விகள் பல எழுந்துள்ளன. அரசிலும், தனியார் துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் ஊழல், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள், விலைவாசி உயர்வு, அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் என்று பல கேள்விகள் இந்தியத் தாயின் கழுத்தை இறுகப் பற்றியுள்ளன. கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்து தற்போது தோல்வியைத் தழுவியுள்ள அரசு, இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், திகைத்தது. அமையவிருக்கும் புதிய அரசு, இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் இன்றைய நிகழ்ச்சிகளைத் தொடர்வோம்.
வெள்ளி, சனி, ஞாயிறு என்று ஒன்றன்பின் ஒன்றாக வரும் வார இறுதி நாட்களை நான் இதுவரை மூவாயிரம் முறைகளுக்கும் மேலாகக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், இந்தவாரம் மட்டும் இந்த மூன்று நாட்கள் எனக்குள் ஒரு சில சிந்தனைகளை எழுப்பின. இதற்குக் காரணம், இவ்வெள்ளியன்று நாம் கடந்த வந்த தேர்தல் முடிவுகள்.
'வெள்ளி' என்ற வார்த்தை, நல்ல நேர்மறையான உணர்வுகளை எழுப்பும் ஒரு வார்த்தை. விடிவெள்ளி என்றால், விடியலை முன்னறிவிக்கும் ஒர் அறிகுறி என்று கூறுகிறோம். இவ்வெள்ளியன்று வெளிவந்த தேர்தல் முடிவுகள், இந்தியாவிற்கு விடியலைத் தருமா என்பதைக் காத்திருந்து பார்க்கவேண்டும்.
வெள்ளியைத் தொடர்வது சனி. பொதுவாக, சனி என்றதும் எதிர்மறை உணர்வுகள் உள்ளத்தில் எழும். தேர்தல் முடிவுகள் வெளிவந்த வெள்ளியைத் தொடரும் சனி போல, யார்தான் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இந்தியாவைப் பீடித்துள்ள சனி நீங்குமா அல்லது, துயரங்கள் தொடருமா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
வெள்ளி, சனி இரண்டையும் தொடர்ந்து ஞாயிறு வருவதுபோல், இந்த அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, உண்மையான ஞாயிறு, உண்மையான ஒளி இந்திய மண்ணில் உதிக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றைய ஞாயிறு சிந்தனைக்குள் அடியெடுத்துவைப்பொம்.








All the contents on this site are copyrighted ©.