2014-05-16 15:59:24

வருகிற திங்களன்று, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவை, தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது


மே,16,2014. மே மாதம் 19, வருகிற திங்களன்று, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவை, தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது ஒரு வரலாற்று மைல்கல் என்று இந்த அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் கூறினார்.
1964ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதியன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அவை, திருத்தந்தையர்களின் ஆசீரையும், ஆதரவையும் பெற்று இந்நிலைக்கு வளர்ந்துள்ளது என்று கர்தினால் Tauran அவர்கள் வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romanoக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியதன் வழியாக, உரையாடல் கலாச்சாரத்தை, கத்தோலிக்கத் திருஅவையில் வளர்த்த புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு திருத்தந்தையும் பல்சமய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை கர்தினால் Tauran அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘உலகோடு உரையாடல்’ என்று திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், ‘அமைதியின் உரையாடல்’ என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், ‘பிறரன்பின் உரையாடல்’ என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், ‘நட்பின் உரையாடல்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூறிவந்துள்ள கருத்துக்களை, பல்சமய உரையாடல் திருப்பீட அவை இவ்வியாழனன்று வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மே 19, வருகிற திங்களன்று, "பல்சமய உரையாடல் பணியில் 50 ஆண்டுகள்" என்ற தலைப்பில், புனிதத் திருத்தந்தை 10ம் பயஸ் அரங்கத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.