2014-05-16 15:40:16

மே 17, 2014. புனிதரும் மனிதரே. - இயேசுவின் திருக்காய வரம் பெற்ற அருள்பணியாளர் - புனித பியத்ரல்சினாவின் பியோ


இத்தாலியின் விவசாய நகரான பியத்ரல்சினாவில், பிரான்செஸ்கோ ஃபோர்ஜியோ என்ற இயற்பெயர்கொண்ட பியோ, 1887ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903ம் ஆண்டு, சனவரி 6ம் தேதி, தனது 15ம் வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவதுறவியாக நுழைந்த இவர், பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார்.
அருள்பணியாளரான புனித பியோ, இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட திருஉருவத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். 1917ம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போது உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த புனித பியோவிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.
1918ம் ஆண்டு, செப்டம்பர் 20ம் தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் புனித பியோ, தன் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் பெறும் பேறுபெற்றார். அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்தத் திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது, மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது.
1968ம் ஆண்டு, செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் புனித பியோ மரணம் அடைந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இவருக்கு 2002ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதி புனிதர் பட்டம் வழங்கினார். இவ்விரு புனிதர்களும் வாழ்நாளில் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.