2014-05-16 15:51:14

பன்னாட்டுத் தூதர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயுதங்களை உருவாக்கி விற்கும் சுயநல கும்பல்களால் உலக அமைதி பெரிதும் அழிந்து வருகிறது


மே,16,2014. மனித குடும்பத்தில் முன்னேற்றம், நீதி ஆகியவற்றை உருவாக்குவதன் வழியாக, உலகில் அமைதியை நிலைநாட்டுவதே அனைத்து அரசுகளின் தலையாய நோக்கம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இந்தியா, எத்தியோப்பியா, லிபேரியா, சூடான், தென் ஆப்ரிக்கா, ஜமெய்க்கா, சுவிட்சர்லாந்து, ஆகிய ஏழு நாடுகளின் சார்பாக திருப்பீடத்துடன் தொடர்பு கொண்டுள்ள தூதர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியைக் குலைக்கும் ஆபத்துக்களைக் குறித்துப் பேசினார்.
அமைதியைக் குறித்து அனைவரும் பேசுகிறோம், ஆயினும் அதற்கு ஆபத்து விளைக்கும் வகையில் ஆயுதங்களைப் பெருக்கி வருகிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை உருவாக்கி விற்கும் சுயநல கும்பல்களால் உலக அமைதி பெரிதும் அழிந்து வருகிறது என்ற கவலையை வெளியிட்டார்.
நாடுவிட்டு நாடும், நாட்டிற்குள்ளும் புலம் பெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அமைதிக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பெரும் ஆபத்து என்பதையும் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, இந்த ஆபத்தை பல்வேறு நிலைகளில் அணுக வேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்று குறிப்பிட்டார்.
முழுமையான மனித முன்னேற்றம், நீதி, அமைதி ஆகிய முயற்சிகளில் ஈடுபடும் அனைத்து நாடுகளுடனும் திருப்பீடம் முழுமையாக ஒத்துழைக்கும் என்ற உறுதியுடன், தன்னை சந்திக்க வந்திருந்த ஏழு தூதர்களும் துவக்கும் பணியையும், அவர்கள் குடும்பங்களையும் தான் அசீரவதிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.