2014-05-16 15:47:48

திருத்தந்தை பிரான்சிஸ் - நம்மிடம் உள்ள விவிலியங்கள் தூசி படிந்து கிடக்கின்றனவா, அல்லது, தினமும் பயன்படுத்தப்படுகின்றனவா


மே,16,2014. நம்மில் பலரிடம் உள்ள விவிலியம் திறக்கப்படாமல், தூசி படிந்திருக்கலாம்; அதை எடுத்து வாசிப்பது பயனளிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலைத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.
"வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்று இயேசு கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தில், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில், இயேசுவை அறிந்துகொள்வதற்கு, எண்ணங்களைவிட, உள்ளத்து உணர்வுகள் அதிக உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.
எண்ணங்களால் இயேசுவைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்து, துவக்கக் காலத் திருஅவையிலும் இருந்ததென்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, எண்ணகளின் பாதையில் நெடுந்தூரம் பயணித்தவர்கள், திரும்பிவர வழி தெரியாமல், உண்மை இறைவனைக் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று என்று கூறினார்.
செபம், அருள் அடையாளங்கள், விவிலியம் என்ற மூன்று வாசல்களைத் திறந்தால், இயேசுவைச் சந்திக்க முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
ஓர் எண்ணம் மதியற்று, தாறுமாறாகச் செல்வதே, தவறானப் படிப்பினைகளாக மாறுகின்றன என்று கூறிய ஓர் ஆங்கில எழுத்தாளரின் மேற்கோளை நினைவுறுத்தியத் திருத்தந்தை, பெரும் இறையியலாளர்கள், முழந்தாள் படியிட்டு, செபித்ததன் வழியாகத் தங்கள் இறையியல் எண்ணங்களைப் பெற்றனர் என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நம்மிடம் உள்ள விவிலியங்கள் தூசி படிந்து கிடக்கின்றனவா, அல்லது, தினமும் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் எழுப்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.