2014-05-15 15:49:45

லெபனான் நாட்டில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் சம உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் - இஸ்லாமியர்களின் உயர் தலைவர்


மே,15,2014. லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும்போது, அது இஸ்லாமியருக்கு எதிராக இழைக்கப்படும் நேரடியான இழுக்கு என்று அந்நாட்டின் இஸ்லாமியத் தலைவர் கூறியுள்ளார்.
லெபனான் நாட்டின் Sunni இஸ்லாமியர்களின் உயர் தலைவரான Sheikh Mohammad Rashid Qabbani அவர்கள், அந்தியோக்கு மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்களை இச்செவ்வாயன்று, அவரது இல்லத்தில் சந்தித்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
லெபனான் நாட்டில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் சம உரிமையுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டியவர்கள் என்பதை எடுத்துரைத்த தலைவர் Rashid Qabbani அவர்கள், இஸ்லாம்-கிறிஸ்தவ ஒற்றுமையை உறுதி செய்யும் ஓர் ஒப்பந்தத்தையும் கர்தினால் Boutros Rai அவர்களிடம் அளித்தார்.
நன்னெறி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உறுதி மொழிகள், லெபனான் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், படிப்படியாக, இந்த ஒற்றுமை உறுதி மொழிகள் அரபு நாடுகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் Sunni இஸ்லாமியர்களின் உயர் தலைவரான Rashid Qabbani அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.