2014-05-15 15:11:27

மே 16,2014 புனிதரும் மனிதரே : பண்பற்ற கும்பலினின்று மக்களைக் காத்தவர்(St. Ubald of Gubbio)


அக்காலத்தில் நூற்றாண்டில் வட ஐரோப்பாவைச் சேர்ந்த பேரரசர் முதலாம் Frederick அல்லது Frederick Barbarossa என்பவர், காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்து வந்தார். இவர், 1155ம் ஆண்டில், இத்தாலியின் உம்ப்ரியா மாநிலத்திலுள்ள Spoleto நகரைச் சூறையாடினார். அதற்குப் பின்னர் அம்மாநிலத்தின் Gubbio நகரையும் சூறையாட வந்துகொண்டிருந்தார். இதையறிந்த Gubbio நகர் மக்கள் மிகவும் பயந்துகொண்டிருந்தனர். எனவே அந்நகர் புனித ஆயர் உபால்தோ பால்தசினி(Ubaldo Baldassini) அவர்கள், Gubbio நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே பேரரசர் முதலாம் Frederick அவர்களைச் சந்தித்து அந்நகரைத் தாக்குதலினின்று காப்பாற்றினார். ஆனால் வெளியே சென்ற ஆயர் உபால்தோ உடனடியாக திரும்பி வராததால் அந்நகர மக்கள் கவலையடைந்தனர். இரு நாள்கள் கழித்துத் திரும்பி வந்தார் ஆயர். அந்நகர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாகவும் அவர் அறிவித்தார். ஆயர் உபால்தோ தங்கள் நகருக்குச் செய்த நன்மைகளைக் கொண்டாடும் விதமாக, இன்றும் "புனித உபால்தோ நாள்" அல்லது "Festa dei Ceri" என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகிறது. புனிதர்களின் அணிவகுப்பு என்றும் இவ்விழா சொல்லப்படுகின்றது. ஏனெனில் இவ்விழா நாளில் புனிதர்கள் ஜார்ஜ், உபால்தோ, அந்தோணி ஆகியோரின் திருஉருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. புனித உபால்தோவின் விழா மே 16. அக்காலத்தில் இத்தாலியின் Gubbio நகர் உட்பட பல பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்தின் Jessup நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யச் சென்ற மக்கள் புனித உபால்தோ பக்தியை அங்கும் எடுத்துச் சென்றனர். இவ்விழா Jessup, பென்சில்வேனியா ஆகிய நகரங்களிலும் ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்படுகிறது. 1084ம் ஆண்டு முதல் 1160ம் ஆண்டுவரை வாழ்ந்த புனித ஆயர் உபால்தோ, Gubbioவில் உயர் குடும்பத்தில் பிறந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்த இவர், அந்நகர் பேராலய ஆயரிடம் கல்வி கற்றார். Gubbio நகரின் புனித Secondo ஆதீனத்தில் சேர்ந்த இவர், Gubbio ஆயரின் அழைப்பின்பேரில் மீண்டும் பேராலயம் திரும்பினார். தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கும் ஆதீன இல்லங்கள் சீரமைப்புக்கும் கொடுத்தார். பின்னர் Gubbio ஆயரானார். புனித வாழ்வு வாழ்ந்த ஆயர் உபால்தோ இரண்டு ஆண்டுகள் நோயால் துன்புற்று மரணமடைந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.