2014-05-15 15:46:47

திருத்தந்தை : திருஅவை இன்றி கிறிஸ்தவர் என்று இல்லை


மே,15,2014. கிறிஸ்தவச் சமூகம் இல்லையென்றால், அதாவது, திருஅவை என்ற அமைப்பு இல்லையென்றால், கிறிஸ்தவர் என்பதும் இல்லை, ஏனெனில் இயேசுகிறிஸ்துவும், மக்களிடையே, நிலையான வாக்குறுதியை நோக்கி இணைந்து நடைபோட வந்தார் என இவ்வியாழன் காலை மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு வரலாற்றிற்குள் வந்தார், அவருக்கென்று தனி வரலாறு உள்ளது என்பதால், வரலாறு இல்லாத கிறிஸ்தவர் என்பது உண்மைக்குப் புறம்பானது என்றார்.
ஒரு நிச்சயமான வாக்குறுதியை நோக்கி, அந்த வாக்குறுதியின் மீதுள்ள நம்பிக்கையுடன், அந்த வாக்குறுதியின் நிறைவை நோக்கி, நடைபோடுவதே, கிறிஸ்தவர், வரலாற்றில் நடைபோடுவதாகும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பழைய நினைவுகள் தாங்கி வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் கிறிஸ்தவர், இயேசுவின் கட்டளைகளை, உடன்படிக்கையை கடைப்பிடிக்க ஆவல் கொள்கின்றனர், அந்த உடன்படிக்கை திருப்பலியில் நிறைவேற்றப்படுவதால், ஒவ்வொரு கிறிஸ்தவரும் நற்கருணையின் மனிதர்களாக மாறுகிறார்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் கிறிஸ்தவ தனித்தன்மை என்பது, திருஅவை எனும் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்திருப்பதாகும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.