2014-05-15 15:49:18

ஆயர்களுடன் சேர்ந்து சேரிகளில் தங்கள் கால்களைப் பதிக்க ஊடகத்தார் வருவார்களா – அர்ஜென்டீனா ஆயரின் கேள்வி


மே,15,2014. அர்ஜென்டீனா நாட்டில் வன்முறைகள் இல்லை என்று சொல்பவர்கள் உண்மையை அறிவதற்கு முயற்சிகள் செய்யாமல், தங்கள் பார்வையை வேறுபுறம் திருப்பி வாழ்கின்றனர் என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் அந்நாட்டு ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்பில் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நிலவும் வன்முறைகள், ஊழல், சிறைகளில் உள்ள குறைபாடுகள், நீதி கிடைப்பதில் தாமதம் ஆகிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆயர்களின் இவ்வறிக்கையை விமர்சனம் செய்துள்ள ஊடகங்கள், ஆயர்களின் ஆடம்பர வாழ்வைக் குறைகூறியுள்ளன.
இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்த, Zamora மறைமாவட்ட ஆயரான இயேசு சபை துறவி, Jorge Rubén Lugones அவர்கள், ஊடகத்தார் ஆயர்களுடன் சேர்ந்து சேரிகளில் தங்கள் கால்களைப் பதிக்க வருவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மக்களுடன் ஆயர்கள் கொண்டுள்ள நேரடித் தொடர்பின் விளைவாகவே தங்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், நாட்டின் கசப்பான உண்மைகளைக் கண்டும், கண்மூடி வாழ்வது, உண்மையான நாட்டுப் பற்று ஆகாது என்றும் ஆயர் Lugones அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.