2014-05-14 15:50:06

மே 15,2014. புனிதரும் மனிதரே : மௌன ஞானி (புனித தாமஸ் அக்குயினாஸ் 1225-1274)


தனது வாழ்க்கையில் ஒரு நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வயது வந்தபோது, அதாவது 17வது வயதில் நேப்பில்ஸ் நகரத்தில் ஒரு துறவு சபையில் சேர்ந்தவர் தாமஸ். பணக்காரக் குடும்பத்தில் பிறந்ததால் இவரது குடும்பம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் இவரது குடும்பத்தினர் இவரை இரண்டு ஆண்டுகள் ஒரு தனி அறையில் அடைத்து வைத்தனர், நற்பண்புகள் இல்லாத ஒரு பெண்ணையும் இவரது அறைக்கு அனுப்பி இவரது கற்பு வாழ்வைச் சோதித்தனர். குடும்பத்தினர் கொடுத்த அனைத்துத் தொல்லைகளையும் வெற்றி கண்டு தொமினிக்கன் சபையில் சேர்ந்தவர்தான் புனித தாமஸ். அக்குயினாஸ் என்ற செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் அதிகம் பேச மாட்டார். அதனால் மற்ற மாணவர்கள் ஊமை மாடு என்றே தாமசைக் கேலி செய்வார்கள். இந்த ஊமை மாடு போடும் சப்தம் ஒருநாள் உலகெங்கும் கேட்கும் என்று இவருக்குப் பேராசிரியராக இருந்த புனித பெரிய ஆல்பெர்ட் சொல்வதுண்டு. சிறந்த அறிஞாரகிய தாமஸ் அரிய பல நூல்களை எழுதியுள்ளார். இவ்வளவு எழுதுவதற்குரிய ஞானம் சிலுவையில் அறையுண்ட இயேசு கொடுத்ததாகச் சொல்வார். இப்புனிதரின் விழா சனவரி 28. புனித தாமஸ் அக்குயினாஸ் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாதுகாவலர். 1323ம் ஆண்டில் புனிதராக உயர்த்தப்பட்டு திருத்தந்தை 5ம் பத்திநாதரால் மறைவல்லுனர் என அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.