2014-05-14 16:03:06

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


மே 14,2014. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் விடுமுறைக்காலம் என்பதால் உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவிலிருந்தும் திருப்பயணிகள் ஒவ்வொரு வாரமும் திருத்தந்தையின் புதன் பொதுமறையுரைகளில் குறிப்பிடத்தகும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர். கடந்த சில வாரங்களாக தூய ஆவியானவரின் ஏழு கொடைகள் குறித்து தன் புதன் பொதுமறையுரைகளில் கூறி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் தூய ஆவியானவரின் கொடையாகிய 'ஆற்றல்' குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஏற்கனவே நாம் தூய ஆவியாரின் மூன்று கொடைகளைக் குறித்து, அதாவது, ஞானம், மெய்யுணர்வு, நுண்மதி ஆகியவை குறித்து சிந்தித்து வந்திருக்கிறோம். கடவுளின் அன்புநிறை திட்டம் குறித்து ஆழ்ந்துத் தியானிக்கவும், அவரின் விருப்பத்தை நாம் அறிந்துகொள்ளவும் இந்த மூன்று கொடைகளும் உதவுகின்றன. அதேவேளை, நம் இயல்பான குறைபாடுகளையும் பலவீனங்களையும் தாண்டி இறைவிருப்பத்தை ஆற்றுவதற்கான பலத்தை இந்த ஆற்றல் எனும் கொடை மூலம் பெறுகிறோம். நம் இதயங்களில் விதைக்கப்படும் விதைகள் உள்ளிருந்து எதிர்ப்பை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல், நம் வாழ்வின் துன்பங்கள் மற்றும் சோதனைகளாலும் அமுக்கப்படக்கூடும். ஆற்றல் எனும் இந்தக்கொடை மூலம் தூய ஆவியானவர் அனைத்துத் துன்பவேளைகளிலும் விசுவாசத்தில் உறுதியுடன் இருக்க நமக்கு உதவுகிறார். இதைத்தான் உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ கிறிஸ்தவர்களின் வாழ்வில் இடம்பெறும் சித்ரவதைகள் மற்றும் மறைசாட்சிய மரணங்களில் காண்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் நம் தினசரி வாழ்வின் சூழல்களில் புனிதத்துவத்தை பொறுமையுடன் தேடிச்செல்வதில் இந்த ஆற்றல் எனும் கொடையைப் பயன்படுத்துகிறோம். நம் வாழ்வின் விசுவாசப் பயணத்தில் சோர்வடையும்போதும் மனத்தளர்ச்சி கொள்ளும்போதும் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் புதுப்பிக்கப்பட்ட உளத்தூண்டுதலுடன் நடைபோடவும் நம்மை வழிநடத்திச் செல்லுமாறு தூய ஆவியானவரை நோக்கி இந்த ஆற்றல் எனும் கொடைக்காக வேண்டுவோம்.
அரபுமொழி பேசும் மக்களுக்கு தன் வாழ்த்துக்களை இப்புதன் பொதுமறையுரையின்போது வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை தனிப்பட்டமுறையில் வாழ்த்துவதாகத் தெரிவித்தார். துன்பங்கள், சித்ரவதைகள், பசிக்கொடுமைகள், ஆயுத மோதல்கள் ஆகியவற்றின் மத்தியில், சோம்பலை, உள்ளார்வத்துடனும், தீமையை, நன்மையுடனும், பகைமையை, அன்புடனும் வெற்றிகொள்ள இறைவனிடம் வேண்டுவோம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் தினசரி வாழ்வு நடவடிக்கைகள் மூலம் கிறிஸ்துவுக்கும் நற்செய்திக்கும் உண்மையுள்ள சாட்சிகளாக இருங்கள் என வேண்டினார்.
மேலும் தன் புதன் பொதுமறையுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கியின் சோமா எனுமிடத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற விபத்தைக் குறிப்பிட்டு, அதில் உயிரிழந்தவர்கள் மற்றும் அச்சுரங்கக் குகைகளில் இன்னும் சிக்குண்டிருப்பவர்களுக்காக செபிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்நாட்களில் மத்தியத்தரை கடலில் இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்களுக்கு செபிக்கும்படி அழைப்பு விடுத்ததோடு, இத்தைய உயிரிழப்புகள் தடுக்கப்படுவதற்கு, மனித உரிமைகள் முதலிடம் பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இவ்வாறு தன் புதன் பொதுமறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.