2014-05-14 16:33:04

தஞ்சம் புகுந்தவர்களை வரவேற்கும் பண்பினை, அமெரிக்கா தொடர்ந்து வளர்க்கவேண்டும் - பாஸ்டன் கர்தினால் O'Malley


மே,14,2014. பல நாடுகளிலிருந்து அமெரிக்க மண்ணில் தஞ்சம் புகுந்தவர்களை வரவேற்ற பெருமைக்குரிய இந்நாடு, தன் வரவேற்கும் பண்பினைத் தொடர்ந்து வளர்க்கவேண்டும் என்று பாஸ்டன் உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Sean O'Malley அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்க்டனில், தேசியக் கத்தோலிக்கச் செபம் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய கர்தினால் O'Malley அவர்கள், புலம் பெயர்ந்த மக்களிடையே தான் ஆற்றிய அருள்பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகள் அமைதியற்றுத் தவித்த வேளையில், அந்நாடுகளிலிருந்து, அமைதி தேடி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வந்து சேர்ந்த நம் முன்னோர் போலவே, இன்று போர்ச்சூழல் நிறைந்த நாடுகளிலிருந்து, அமைதியையும், பாதுகாப்பையும் தேடிவரும் மக்களை நாம் தொடர்ந்து வரவேற்க வேண்டும் என்று கர்தினால் O'Malley அவர்கள் விண்ணப்பித்தார்.
நற்செய்தியின் விழுமியங்களை அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சமுதாயத்தில் நிலைநாட்ட நாம் தயக்கமோ வெட்கமோ அடையக்கூடாது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் அகில உலக சமயச் சுதந்திரக் குழுவின் தலைவர் பேராசிரியர் ராபர்ட் ஜார்ஜ் அவர்கள், இக்கூட்டத்தில் பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.