அண்மையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை 23ம்
ஜான் அவர்களின் நகைச்சுவை உணர்வும், உரையாடல்களும் உலகறிந்த உண்மை. புனிதத் திருத்தந்தை
23ம் ஜான் அவர்கள், தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, வத்திக்கானில் பணியாற்றும் ஊழியர்களின்
மாத ஊதியம் உயர்த்தப்பட்டது. அங்கு வாழ்ந்த ஒரு கர்தினால், திருத்தந்தை 23ம் ஜான் அவர்களிடம்
சென்று, "வத்திக்கானில், வாசல் கதவைத் திறக்கும் ஒரு பணியாளரும், ஒரு கர்தினாலும் ஒரே
அளவு ஊதியம் பெறுகின்றனர்" என்று முறையிட்டார். புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள்,
அக்கர்தினாலிடம், "வாசல் கதவைத் திறக்கும் பணியாளருக்கு பத்துக் குழந்தைகள் உள்ளனர்.
கர்தினாலுக்குக் குழந்தைகள் ஏதும் கிடையாது. அப்படித்தானே?" என்று சிரித்தபடியே கேட்டார். 1958ம்
ஆண்டு, அக்டோபர் மாதம் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 23ம்
ஜான் அவர்கள், தான் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், அதாவது, 1959ம் ஆண்டு சனவரி மாதம்,
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டும் எண்ணத்தை வெளியிட்டார். இதைக் கேட்ட வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர், "திருத்தந்தையே, இந்த பிரம்மாண்டமான முயற்சியைத் துவக்க குறைந்தது
5 ஆண்டுகள் தேவைப்படும். எனவே, 1963ம் ஆண்டுக்குள் இம்முயற்சியை மேற்கொள்ள முடியாது"
என்று கூறினார். உடனே திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், "அப்படியானால், 1962ம் ஆண்டு நாம்
சங்கத்தைக் கூட்டுவோம்" என்று கூறினார். அதேபோல், 1962ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம்
தேதி இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் துவக்கி வைத்தார் புனிதத் திருத்தந்தை 23ம் ஜான்
அவர்கள். 2ம் வத்திக்கான் சங்கத்தைத் துவக்கி வைத்த எட்டு மாதங்களுக்குப் பிறகு, 1963ம்
ஆண்டு ஜூன் 3ம் தேதி இவர் இறைவனடி சேர்ந்தார். இவரது திருநாள், இவரது மரண நாளன்று கொண்டாடப்படுவதில்லை.
மாறாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க 2ம் வத்திக்கான் சங்கத்தை அவர் துவக்கி வைத்த அக்டோபர்
11ம் தேதியன்று இப்புனிதரின் திருநாள் கொண்டாடப்படுகிறது.