2014-05-13 18:06:35

திருத்தந்தை பிரான்சிஸ் - நம் இதயங்களை, தூய ஆவியாருக்குத் திறப்பதன் வழியாக மட்டுமே கடவுளின் வழிகளை அறிந்துகொள்ள முடியும்


மே,13,2014. கடவுளின் வழிகளை நம் அறிவின் வழியே அறிந்துகொள்ள முடியாது, மாறாக, நம் இதயங்களை, தூய ஆவியாருக்குத் திறப்பதன் வழியாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்று இச்செவ்வாயன்று காலைத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவருக்கும் நம் கதவுகளை மூடாமல், தூய ஆவியார் காட்டும் பாதையில் நடைபோடுவதே, இறைவனின் வழிகளை அறிந்துகொள்வதற்கு சிறந்த வழி என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில் நிகழ்த்திய மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
புனித ஸ்தேவான் மரணத்திற்குப் பின் பல இடங்களுக்கும் சிதறி ஓடிய இயேசுவின் சீடர்கள், தங்களுடன் நற்செய்தியின் விதைகளையும் எடுத்துச் சென்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
அன்றையச் சீடர்கள், யூதர்களுக்கு மட்டும் பணியாற்றவேண்டும் என்று தங்களைக் குறுக்கிக் கொள்ளவில்லை, மாறாக, புறவினத்தாருக்கும், கிரேக்கர்களுக்கும் தங்கள் பணிகள் உரியன என்ற பரந்த உள்ளத்துடன் செயல்பட்டனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் காட்டிய வழியில் அவர்கள் நடந்தனர் என்று மேலும் கூறினார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறை வல்லுனர்கள் அவரோடு வாக்குவாதம் செய்வதையே விரும்பினர், ஏனெனில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் போதும் என்று நம்பிய அவர்கள், மக்களின் இதயங்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை என்பதையும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையோரைப் போல வாழாமல், தூய ஆவியாருக்கு நம் இதயத்தை திறந்தவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.