2014-05-12 16:11:34

நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகள் உடனடியாக விடுவிக்கப்பட திருத்தந்தை விண்ணப்பம்


மே,12,2014. நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிச்சிறுமிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென்று அனைவரும் செபத்தில் இணைவோம் என்ற டுவிட்டர் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை இரவு வெளியிட்டார்.
மனிதர்களுக்கு உரிய மதிப்பை, அதிலும் சிறப்பாக, எப்பாவமும் அறியாத, வலுவற்ற குழந்தைகளுக்கு உரிய மதிப்பை வழங்க மறுக்கும் எவரும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானவர்கள் என்று திருப்பீடத்தின் சார்பில் பேசிய, இயேசு சபை அருள்பணியாளர் ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
கடந்த மாதம் நைஜீரியாவின் Chibok என்ற ஊரிலிருந்து 276 பள்ளிச் சிறுமியர் கடத்தப்பட்ட நிகழ்வை, திருப்பீடம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அருள்பணியாளர் லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெறுப்பின் அடிப்படையில் வளரும் வன்முறைகளைகயும், அடிப்படைவாத செயல்பாடுகளையும் களைந்து, நைஜீரியாவில் அமைதியை உருவாக்கும் முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டுமென திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.