2014-05-12 16:06:06

திருத்தந்தை பிரான்சிஸ் - மன்னிப்பு வழங்குவதில் அருள் பணியாளர்கள் என்றும் சலிப்படையக் கூடாது


மே,12,2014. அருள் பணியாளர்களிடம் நான் சிறப்பாக வேண்டிக்கொள்வது இதுதான். கருணை காட்டுவதில் சலிப்படையாதீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் கூறினார்.
நல்லாயன் ஞாயிறன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 13 தியாக்கோன்களை அருள் பணியாளர்களாக அருள் பொழிவு செய்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லாயன் இயேசுவைப் போல, மன்னிப்பு வழங்குவதில் அருள் பணியாளர்கள் என்றும் சலிப்படையக் கூடாது என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.
அருள் பணியாளர்களுக்குத் திருப்பொழிவு செய்யும் திருப்பலியின் ஒரு பகுதியாக, பாரம்பரியமாக வழங்கப்படும் மறையுரையை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசுகையில், இவ்வுலகில் அருள் பணியாளர்கள் ஆற்றவேண்டிய சிறப்பான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார்.
உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 11 தியாக்கோன்களையும் பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த இரு தியாக்கோன்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள் பணியாளர்களாக திருப்பொழிவு செய்தார்.
திருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்களும், ஏனைய ஆயர்கள், துறவறச் சபைகளின் தலைவர்கள் ஆகியோரும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினர்.
தான் அருள் பொழிவு செய்யவிருக்கும் தியாக்கோன்களை தனியேச் சந்திக்க, திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததால், ஏப்ரல் 25ம் தேதியன்று, தியாக்கோன்கள் அனைவரும் திருத்தந்தையை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.