2014-05-12 16:09:45

திருத்தந்தை பிரான்சிஸ் - பள்ளிகளுக்குச் செல்வதால் மூன்று மொழிகளை நாம் பயில முடியும்


மே,12,2014. பள்ளிகளில் பிரச்சனைகள் இருந்தாலும், பள்ளி வாழ்வைக் கொண்டாட நீங்களும் நானும் இங்கு கூடியிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பள்ளி மாணவ, மாணவியரிடம் கூறினார்.
மே 10, கடந்த சனிக்கிழமை மாலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் சுற்றியிருந்த பகுதிகளிலும் இலட்சக் கணக்கில் கூடி வந்திருந்த மாணவ, மாணவியரையும் அவர்களது ஆசிரியர்கள், பயிற்றுவிக்காப் பணியாளர்கள், பள்ளிப் பொறுப்பாளர்கள், பெற்றோர் அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
காலை பத்து மணியிலிருந்து வளாகத்தைச் சுற்றியிருத்த அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்து நின்ற அனைவரையும், மாலை 4 மணியளவில், திறந்ததொரு 'ஜீப்'பில் வந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்தித்தார்.
கல்வியின் மீது மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையிலும், கல்வியில் உள்ள பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தும் வகையிலும், "La Chiesa per la scuola", அதாவது, 'பள்ளிக்காகத் திருஅவை' என்ற மையக்கருத்துடன், இத்தாலிய ஆயர் பேரவையும், இத்தாலிய கல்வித் துறையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
பள்ளிகளுக்குச் செல்வதால், அறிவு மட்டுமல்ல, இதயமும் விரிவடைகிறது என்பதாலும், உண்மை, அழகு, நன்மை என்ற உயர்ந்த வாழ்வியல் தத்துவங்களை, பள்ளிகளில் கற்றுக் கொள்ளலாம் என்பதாலும், பள்ளிகளை, தான் அதிகம் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாணவச் சமுதாயத்திடம் எடுத்துரைத்தார்.
பள்ளிகளுக்குச் செல்வதால் மூன்று மொழிகளை நாம் பயில முடியும் என்ற புதிரை விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிந்தனை மொழி, மனதின் மொழி, செயல்களின் மொழி என்பவையே இம்மூன்று மொழிகள் என்று விளக்கிக் கூறினார்.
மாலை 6 மணி வரை நீடித்த இந்த மாபெரும் நிகழ்வில் அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.