2014-05-12 16:04:27

திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுள் புதிய வழிகளைத் திறக்கும்போது, அவ்வழிகளை மூடுவதற்கு நாம் யார்?


மே,12,2014. நாளை நாம் செவ்வாய் கோளுக்குச் செல்லும்போது, அங்குள்ள புதுமையான பிறவிகளில் ஒருவர், 'எனக்குத் திருமுழுக்கு வேண்டும்' என்று கேட்டால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை திருப்பலியில் எழுப்பினார்.
இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தரப்பட்டுள்ள வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் செயல்பாடுகளுக்குத் தடைவிதிக்க நாம் யார் என்ற கேள்வியைத் தொடுத்தார்.
விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்கும், நற்செய்தியை ஏற்றுக்கொண்ட பிற இனத்தவருக்கும் இடையே உருவான இறுக்கமானச் சூழலைப் புனித பேதுரு சந்தித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாகுபாடுகளை முன்னிறுத்துவது, திருஅவை வரலாற்றின் துவக்கத்திலிருந்தே காணப்படுகிறது என்றுரைத்தார்.
திருஅவையில் அனைவரையும் இணைக்க, கடவுள் புதிய வழிகளைத் திறக்கும்போது, நமது குறுகிய கண்ணோட்டத்தால், அவ்வழிகளை மூடும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நாம் யார் என்ற கேள்வியை, தன் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை.
திருஅவையின் தலைமைப் பொறுப்பு தூய ஆவியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், தூய ஆவியாரின் தூண்டுதலுக்குச் செவிமடுப்பதே திருஅவைப் பணியாளர்களின் கடமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Twitter செய்தியில், "கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் பாதுகக்கப்பட்டுள்ளோம். அவரது அன்பால் எப்போதும் நாம் புதுப்பிக்கப்படுவோமாக" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.