2014-05-12 16:07:33

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைமக்கள், தங்கள் அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் தேடிச்சென்று தொந்தரவு செய்யவேண்டும்


மே,12,2014. அருள் பணியாளர்களும், ஆயர்களும் மக்களாகிய உங்களுக்கு, அருள், படிப்பினைகள், வழி நடத்துதல் ஆகிய பாலைப் புகட்ட வேண்டுமென்று அவர்களைத் தொந்தரவு செய்யுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
நல்லாயன் ஞாயிறன்று மதியம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார்.
அருள் பணியாளர்கள், ஆயர்கள் ஆகியோரின் இல்லக் கதவுகளையும், உள்ளக் கதவுகளையும் நீங்கள் தொடர்ந்து தட்டுவதால், அவர்கள் இயேசுவைப் போல நல்ல மேய்ப்பர்களாக வாழும் வாய்ப்பை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பசித்திருக்கும் கன்று, பசுவின் மடியில் முட்டி, பாலைப் பருகும் உருவகத்தை, செசாரியுஸ் (St Caesarius) என்ற துவக்கக் காலப் புனிதர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களும், தங்கள் அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் தேடிச்சென்று தொந்தரவு செய்யவேண்டும் என்று கூறினார்.
அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், புது நன்மை, உறுதிப் பூசுதல் ஆகிய திருவருள் அடையாளங்களுக்குத் தங்களையேத் தயாரித்துவரும் குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்த்துக்களைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று 'அன்னை தினம்' கொண்டாடப்படுவதால், அனைத்து அன்னையருக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.