தாக்குதல்கள் குறித்த இஸ்ராயேல் அரசின் மௌனத்தால் எருசலேம் முதுபெரும் தந்தை கவலை
மே,12,2014. கிறிஸ்தவக் கோவில்கள், முஸ்லீம் மசூதிகள் மற்றும் அரபுக் கட்டிடங்கள் மீது
இஸ்ராயேல் தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து இஸ்ராயேல் அரசு மௌனம் காப்பதாக
குற்றஞ்சாட்டியுள்ளார் எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal. திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் எருசலேமில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் நெருங்குவரும் இவ்வேளையில், இத்தகையத்
தாக்குதல்கள் இடம்பெறுவது குறித்து கவலையை வெளியிட்ட இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்
தந்தை Twal அவர்கள், குடிமக்கள் ஆட்சி என்று பெருமைப்படும் இஸ்ரேல் நாட்டிற்கு இது ஒரு
பெரும் கறை என தெரிவித்தார். பிற மதத்தவரின் உடமைகள்மீது தாக்குதல் நடத்தும், மற்றும்
பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பும் இஸ்ராயேல் தீவிரவாதிகள்மீது இஸ்ராயேல் அரசு நடவடிக்கை
எடுக்கத் தவறுவதன்மூலம் இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன எனவும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்
எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Twal.