2014-05-10 16:46:24

புனிதரும் மனிதரே - யாசிக்கும் பணியில் ஆர்வம் கொண்ட புனிதர்


1701ம் ஆண்டு ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த இக்னேசியஸ், தன் 17வது வயதில் மிகுந்த நோயுற்றார். தன்னை இறைவன் அந்த நோயினின்று குணமாக்கினால், தான் பிரான்சிஸ்கன் துறவியாக வாழ்வதாக அந்த இளையவர் இறைவனிடம் வாக்கு தந்தார். நோயிலிருந்து குணமானதும், அவரது தந்தை, அவர் துறவு வாழ்வை மேற்கொள்வதைத் தடுத்தார். ஈராண்டுகள் சென்று, இளைஞன் இக்னேசியஸ் குதிரையில் சென்றபோது, ஒரு பெரும் விபத்தில் சிக்கும் நிலையில் இருந்தார். இறுதி நேரத்தில், அவர் சவாரி செய்த குதிரை சட்டென்று நின்றதால், அவர் உயிர் தப்பினார். தன் உயிரை மீண்டும் காத்தது இறைவன் என்பதை உணர்ந்த இக்னேசியஸ், பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைந்தார்.
சகோதரர் இக்னேசியஸ், துறவுச் சபையில் மிகவும் எளிமையானதொரு பணியை 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தார். அதுதான், வீடு வீடாகச் சென்று, தர்மம் கேட்கும் பணி. வீடுகளில் உள்ளோர் இவருக்கு உணவும், பணமும் தந்தபோது, இவர், பதிலுக்கு ஆன்மீகக் கொடைகளை வழங்கினார். நோயுற்றிருந்தோருக்கு ஆறுதல் வழங்கினார்; தனிமையில் இருந்தோரைத் தேற்றினார்; இல்லற உறவுகளில் இருந்த பிளவுகளை குணமாக்கி, குடும்பங்களை இணைத்தார்.
60 ஆண்டுகள் பிரான்சிஸ்கன் துறவுச் சபையில் தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த சகோதரர் இக்னேசியஸ், 1781ம் ஆண்டு, மே 11ம் தேதி, தன் 80வது வயதில் இறையடி சேர்ந்தார். 1951ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இவரை புனிதராக உயர்த்தினார். லகோனியின் இக்னேசியஸ் (St. Ignatius of Laconi) என்றழைக்கப்படும் இப்புனிதரின் திருநாள் மே 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.