2014-05-09 16:44:26

பிரித்தானிய அரசின் முயற்சிகள் தவறு என்று, கத்தோலிக்கத் திருஅவை குரல் எழுப்பும் நேரம் இது - திருப்பீடத் தூதர் பேராயர் Mennini


மே,09,2014. பிரித்தானிய அரசின் முயற்சிகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட, இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை குரல் எழுப்பும் நேரம் இது என்று பிரித்தானியத் திருப்பீடத் தூதர் கூறினார்.
இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஆயர்களின் ஆண்டுக் கூட்டத்தில் துவக்க உரை வழங்கிய பிரித்தானியத் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Mennini அவர்கள் இவ்வாறு கூறினார்.
'உதவி செய்யப்படும் தற்கொலை' (assisted suicide) என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு சட்டவரைவின் மீது பிரித்தானியப் பாராளுமன்றம் விவாதங்களை துவங்கியிருப்பது குறித்து கவலை தெரிவித்த பேராயர் Mennini அவர்கள், அரசின் முயற்சிகளை எதிர்த்து திருஅவை குரல் எழுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
'உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரும், குறிப்பாக, வலுவற்ற வகையில் பிறக்கும் குழந்தைகள், நோயுற்றோர், வயதில் முதிர்ந்தோர் அனைவரும் கடவுளின் ஒப்பற்றக் கலைத்திறனை வெளிப்படுத்துபவர்கள்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை நினைவுறுத்திப் பேசியப் பேராயர் Mennini அவர்கள், உயிர்களைக் காப்பது திருஅவையின் தலையாயப் பணி என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.