2014-05-09 16:45:24

துன்புறும் மக்களை விட்டு வெளியேற, தனக்கு விருப்பமில்லை - இயேசு சபை அருள் பணியாளர் Hilal


மே,09,2014. மதம், இனம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரில் துன்புறும் 6000 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருவதாக, அப்பகுதியில் பணியாற்றும் இயேசு சபை அருள் பணியாளர் Ziad Hilal அவர்கள் கூறினார்.
சிரியாவில் ஹோம்ஸ் நகரில் வன்முறைகளுக்கு பலியாகிவந்த மக்களிடையே தங்கி உழைத்து வந்ததால், ஏப்ரல் மாதம் 7ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Frans van der Lugt அவர்களின் நெருங்கிய நண்பரான அருள்பணி Hilal அவர்கள், அருள்பணி van der Lugt அவர்களின் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் உதவியுடன் ஏழைக் குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அருள்பணி Hilal உதவிவருகிறார்.
சண்டை இடம்பெறும் இடங்களிலிருந்து வெளியேறலாம் என்று தன் துறவு சபைத் தலைவர்கள் கூறியிருந்த போதிலும், துன்புறும் மக்களை விட்டு வெளியேற, தனக்கு விருப்பமில்லை என்று அருள்பணி Hilal அறிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் சிரியா நாட்டில் உள்நாட்டுப் போர் துவங்கியதிலிருந்து 90 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். துன்புறும் குடும்பங்கள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு உதவிகள் வழங்கும் Aid to the Church in Need அமைப்பு இதுவரை 35 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள உதவிகள் செய்துள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.