2014-05-09 16:37:37

திருத்தந்தை பிரான்சிஸ் - 'புனிதம் அடைவது எப்படி' என்ற தலைப்பில் பாடங்கள் நடத்த முடியாது


மே,09,2014. புனிதர்கள் பெரும் கதாநாயகர்கள் அல்ல; அவர்கள் இயேசுவின் பணிவு, சிலுவை ஆகிய வழிகளில் செல்லும் பாவிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருஅவையின் எதிரியாகத் துவங்கி, திருஅவையின் தூதராக மாறிய புனித பவுலின் மனமாற்றத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் பாவிகள் என்றால், திருஅவையை எவ்விதம் 'புனிதத் திருஅவை' என்று அழைக்கமுடியும் என்ற கேள்வியை, தன் மறையுரையில் எழுப்பியத் திருத்தந்தை, பாவிகளைக் கொண்டுள்ளத் திருஅவை, கிறிஸ்துவின் தியாகப் பலியினால் ஒவ்வொரு நாளும் புனிதமடைகிறது என்று விளக்கினார்.
ஒருவரும் தன்னில் தானே புனிதம் அடைவதில்லை, மாறாக, கிறிஸ்துவின் பலியினால் புனிதமடைகிறோம் என்பதை உலகிற்கு உணர்த்த, இயேசு, புனித பவுலைப் போல், ஒரு சிலரைத் தேர்ந்து, புனிதத்தின் எடுத்துக்காட்டாக உலகிற்குத் தருகிறார் என்று கூறினார் திருத்தந்தை.
'புனிதம் அடைவது எப்படி' என்ற தலைப்பில் பாடங்கள் நடத்த முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகதலா மரியா, மத்தேயு என்ற பாவிகளை இயேசு தெரிவு செய்து புனிதமடையச் செய்ததை, தன் மறையுரையில் விளக்கினார்.
மேலும், “ஒவ்வொருநாளும் நம்மை தியாகம் செய்வதே புனிதம். எனவே, திருமண வாழ்வு, புனிதத்திற்கு இட்டுச் செல்லும் உன்னத வழி” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.