2014-05-09 16:39:07

திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயர்கள் மத்தியில் நிலவும் ஒருமைப்பாடு, மக்கள் மத்தியிலும் காணப்படும்


மே,09,2014. எத்தியோப்பியா, எரித்ரியா என்ற இரு வேறு நாடுகளில், வெவ்வேறு வழிபாட்டு முறைகளில் பணியாற்றும் ஆயர்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து வந்திருப்பது அகில உலகத் திருஅவையின் உலகளாவிய ஒன்றிப்பு அழகை வெளிப்படுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்க ஆயர்கள் மேற்கொள்ளும் 'அத் லிமினா' சந்திப்பில் ஈடுபட்ட எத்தியோப்பியா, எரித்ரியா ஆகிய நாடுகளின் ஆயர்களை இவ்வேள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஆயர்கள் மத்தியில் நிலவும் ஒருமைப்பாடு, மக்கள் மத்தியிலும் காணப்படும் என்று கூறினார்.
திருஅவையின் துவக்கக் காலத்திலிருந்து இந்நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசம் வேரூன்றப்பட்டது என திருத்தூதர் நூலில் சொல்லப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த விசுவாசத்தை இந்த மண்ணில் வளரச்செய்த மறைப் பணியாளர்களை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிக்கும் பணியில் மறைப் பணியாளர்கள் ஈடுபட்டதைப் போல, நாம் வாழும் காலத்தில், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவைப் பெயரளவில் அறிந்தவர்களுக்கும் அவரை அறிவிக்கும் பணியில் நாம் ஈடுபடவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மறைப்பரப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர்கள், துறவியர் அனைவரையும் தந்தைக்குரிய பாசத்தோடு வழிநடத்த வேண்டிய பொறுப்பை ஆயர்கள் பெற்றுள்ளனர் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் நினைவுபடுத்தினார்.
எத்தியோப்பியா, எரித்ரியா நாடுகளில் வாழும் அனைவரையும், குறிப்பாக, அவர்கள் மத்தியில் வாழும் முதியோரை தான் சிறப்பாக நினைவுகூர்வதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைத்து ஆயர்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.