2014-05-09 16:44:51

இந்தியாவில் மதத் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருக்காது - அருள்பணி Faustine Lobo


மே,09,2014. இம்மாதம் 16ம் தேதி இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, வெற்றி பெற்று அரசமைக்கும் கட்சி, வளர்ச்சி, தகவல்துறை, உள்கட்டுமான அமைப்பு மற்றும் கல்வி ஆகியத் துறைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று இந்திய அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
உரோமையில் தற்போது நடைபெறும் திருத்தந்தையின் மறைப்பரப்புப் பணிக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள இக்கழகத்தின் இந்தியத் தலைவர், அருள்பணி Faustine Lobo அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
அரசு கவனம் செலுத்த வேண்டிய இத்துறைகள், அமையவிருக்கும் அரசுக்கு மட்டுமல்ல, இந்தியத் திருஅவையின் பணிகளுக்கும் முக்கியத்துவம் நிறைந்தவை என்று கூறிய அருள்பணி Lobo அவர்கள், இந்தியத் திருஅவை, சமுதாயப் பணிகளுக்கும், கல்விக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது என்று எடுத்துரைத்தார்.
எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததாலும், கூட்டாட்சி அமையும்போது, மிதவாதத் தலைவர்களையே கூட்டணிகள் விரும்பும் என்பதாலும், இந்தியாவில் மதத் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருக்காது என்ற நம்பிக்கையையும், அருள்பணி Lobo அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.