2014-05-08 16:07:52

மக்களின் அனுபவத்தில் நற்செய்தியின் விழுமியங்களைப் பறைசாற்றுவது முக்கியம் - கர்தினால் Baldisseri


மே,08,2014. கத்தோலிக்கத் திருஅவை, வரலாற்றுடன் தன்னையே இணைத்து, மக்களின் அனுபவத்தில் நற்செய்தியின் விழுமியங்களைப் பறைசாற்றுவது முக்கியம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குடும்பங்களை மையப்படுத்தி வருகிற அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் Lorenzo Baldisseri அவர்கள், இத்தாலியின் Tertio என்ற கிறிஸ்தவ வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் கர்தினால் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ள Baldisseri அவர்கள், நற்செய்தியும், திருஅவையும் வழங்கிவரும் உண்மைகளின் நிலையை மாற்றாமல், அதே நேரம், அந்த உண்மைகளை தற்காலச் சூழலுக்கு ஏற்பப் புரிந்துகொள்ளும் சவாலை நாம் இன்று சந்திக்கிறோம் என்று கூறினார்.
புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் குடும்பங்களை மையப்படுத்தி வெளியிட்ட "Familiaris Consortio" என்ற சுற்றுமடல் வெளியாகி 33 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றும், குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதால், இந்த சிறப்பு ஆயர் மாமன்றம் நமது இன்றையத் தேவை என்றும் கர்தினால் Baldisseri அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.