2014-05-08 16:03:23

திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவர்கள் சிந்தும் இரத்தம் நம்மை இன்னும் நெருங்கி வரச் செய்கிறது


மே,08,2014. துவக்க காலக் கிறிஸ்தவர்கள் சிந்திய இரத்தம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை வளர்த்ததுபோல், இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சிந்தும் இரத்தம் நம்மை இன்னும் நெருங்கி வரச் செய்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அர்மீனியா நாட்டின் அப்போஸ்தலிக்க திருஅவையைச் சேர்ந்த 'Catholicos' என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் முதுபெரும் தந்தை இரண்டாம் Karekin அவர்கள் இம்மாதம் 7 முதல் 9ம் தேதி முடிய உரோம் நகரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, முதுபெரும் தந்தை இரண்டாம் Karekin அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, உரோமையக் கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்மீனிய அப்போஸ்தலிக்க திருஅவைக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து திருத்தந்தை தன் மகிழ்வை எடுத்துரைத்தார்.
2000மாம் ஆண்டு கொண்டாடப்பட்ட ஜுபிலி ஆண்டையொட்டி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் ஆர்மீனியா சென்றபோது, இவ்விரு திருஅவைகளுக்கும் இடையே உருவான நல்லுறவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவுகூர்ந்தார்.
ஆர்மீனியாவிலும் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் கிறிஸ்தவர்கள் சிந்தும் இரத்தம் நம்மை மேலும் நெருக்கமாகப் பிணைக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரு திருஅவைகளும் ஆண்டவரின் நற்கருணை விருந்தில் இணையும் நல்ல நாளை தான் அதிகம் எதிர்நோக்குவதாகக் கூறியத் திருத்தந்தை, இத்தகைய ஒன்றிணைப்பை உருவாக்க தூய ஆவியார் நம்மை வழிநடத்தவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.