2014-05-08 16:02:43

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவனின் தூண்டுதல்களுக்குப் பணியாதவர்கள், இறைவனை எடுத்துரைக்க முடியாது


மே,08,2014. திருஅவையின் திருவருள் அடையாளங்களை வழங்கப் பணிக்கப்பட்டவர்கள், தங்கள் 'அதிகாரம்' என்ற நிலையை ஒரு தடையாகப் பயன்படுத்தக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, திருத்தூதர் பணிகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தூதர் பிலிப் அவர்களை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குப் பணிதல், மனம் திறந்த உரையாடலை மேற்கொள்ளுதல், இறையருளில் நம்பிக்கைக் கொள்ளுதல் ஆகிய மூன்று அம்சங்கள் திருத்தூதர்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மூன்று பண்புகளையும் திருத்தூதர் பிலிப் வெளிப்படுத்தினார் என்று எடுத்துரைத்தார்.
இறைவனின் தூண்டுதல்களுக்குப் பணியாதவர்கள், தங்களைப் பற்றியே அதிகம் எடுத்துரைப்பரே தவிர, இறைவனை எடுத்துரைக்க அவர்களால் முடியாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரித்தார்.
உரையாடல்களை மேற்கொவது நேரத்தை வீணாக்கும் வழிகள் என்று கூறுவோர், தங்கள் கருத்தை மற்றவர் மீது திணிக்க முற்படுகின்றனர் என்றும், இதனால் இறைவனின் நற்செய்தி தடைபடுகிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
"நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?" என்று எத்தியோப்பிய அரச அலுவலர் எழுப்பிய கேள்வியைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையற்ற, தவறான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு, திருஅவையில் காணப்படும் பெரும் தடை என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.