2014-05-08 16:10:31

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை


மே,08,2014. தமிழ்நாட்டில், காளை மாடுகளை பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயப் போட்டிகளுக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் இப்புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கலாசார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் நிகழ்வைத் தடை செய்ய வலியுறுத்தி, விலங்குகள் நல வாரியம் மற்றும் பேடா அமைப்பு வழக்கு தொடுத்தன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சி.கோஷ் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், காளை மாடுகளை இது போன்ற போட்டிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர எடுத்துள்ள முயற்சியையும் நிறுத்தி வைத்திருக்கிறது .
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி, விலங்குகள் உரிமை அமைப்பான பெடா சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜ் பாஞ்ச்வானி அவர்கள், "ஜல்லிக்கட்டுக்கு தடையென்பது கருணைக்கு கிடைத்த வெற்றி" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நீண்ட கால பிரச்சனையாக விவாதிக்கப்பட்ட இந்த சர்ச்சையில், இரு தரப்புகளும் தங்கள் வாதங்களை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து முன்வைத்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இப்போட்டிகளை முறைப்படுத்தி புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டபோதும், அவற்றை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழகத்தில் சில குறிப்பிட்ட அமைப்புகள், இந்தப் பிரச்சனையில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் போராடுவோம் என்றும், அதே சமயம் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போட்டிகளை நாங்கள் ஒரு போதும் நடத்த மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.