2014-05-08 16:05:23

ஐ.நா.அவையின் செயலர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திக்கிறார்


மே,08,2014. "நம் குடும்பங்களில் உள்ள அனைவரின் மாண்பை, குறிப்பாக, நம்மிடையே வாழும் வயது முதிர்ந்தோரின் மாண்பை நாம் உணரவும், அன்புடன் மதிக்கவும் கற்றுக்கொள்வோம்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மே 9, இவ்வியாழனன்று ஐ.நா.அவையின் செயலர் பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
மேலும், மே 11, வருகிற ஞாயிறு கொண்டாடப்படும் நல்லாயன் ஞாயிறன்று, காலை 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில், 13 தியாக்கோன்களை அருள் பணியாளர்களாக திருநிலைப்படுத்துகிறார்.
இவர்களில் 11 தியாக்கோன்கள் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர், வியட்நாமைச் சேர்ந்தவர் என்றும் உரோம் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.