2014-05-08 16:06:32

Pompei மன்றாட்டு மரியன்னை பேராலயத்தில் கர்தினால் பியெத்ரொ பரோலின் வழங்கிய மறையுரை


மே,08,2014. மரியன்னை வழியே நாம் அடைந்துள்ள கொடைகளை நமக்குள் பத்திரமாக வைத்திருப்பதில் அர்த்தமில்லை, மாறாக, அவற்றை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதே நமக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க Pompei எனும் இடத்தில் மே 8, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் மரியன்னை விழாவையொட்டி, அங்குள்ள மன்றாட்டு மரியன்னை பேராலயத்தில் திருப்பலியாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
நம்பிக்கையை அறிக்கையிடுவது, நம்பிக்கையை நடைமுறை வாழ்வாக்குவது, நம்பிக்கையைப் பகிர்வது என்று மூன்று கருத்துக்களில் தன் மறையுரையை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த மூன்று அம்சங்களுக்கும் மரியன்னையும், மரியன்னை பக்தியை Pompei பகுதியில் வளர்த்த முத்திப்பேறு பெற்ற Bartolo Longo அவர்களும் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று கூறினார்.
சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முத்திப்பேறு பெற்ற Longo அவர்கள், தன் மனமாற்றத்திற்குப் பிறகு, 1872ம் ஆண்டு முதல் செபமாலை அன்னையின் பக்தியை வளர்த்தார் என்பதும், மன்றாட்டு மரியன்னையின் பரிந்துரையால் Pompei பகுதியில் இந்த பக்தி முயற்சி அன்று முதல் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.