2014-05-07 16:12:29

மும்பையில் கருக்கலைத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆயர் கவலை


மே 07,2014. கடந்த ஏழு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு மும்பையில் கருக்கலைத்தல்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நகர் துணை ஆயர் சாவியோ ஃபெர்னாண்டஸ்
கடந்த ஆண்டு மும்பையில் இடம்பெற்ற கருக்கலைத்தல்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட 10 விழுக்காடு அதிகரித்து 30,117யை எட்டியதாக நகரின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டிய ஆயர் சாவியோ, பெண்குழந்தைகள் குறித்த முன்சார்பு எண்ணம், திருமணத்திற்குமுன் உடலுறவுகள், ஏழ்மை போன்றவைகளே கருக்கலைத்தல் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளன எனவும் கூறினார்.
ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், மனித மாண்பை உயர்த்திப்பிடிப்பதும், இறைவனை மையமாக வைத்து நம் வாழ்க்கைமுறையை ஒழுங்குப்படுத்துவதும் இத்தீமைக்கான தீர்வாக அமையலாம் எனவும் எடுத்துரைத்தார் மும்பை துணை ஆயர் சாவியோ.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.