மே 07,2014. வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளால் மீண்டுமொருமுறை நிரம்பி
வழிந்தது திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தையொட்டி. இந்த கூட்டத்தில் இந்தியாவில்
இருந்து வந்திருந்த எண்ணற்ற திருப்பயணிகளும் இருந்தனர். இதில், சென்னை எக்மோர் புனித
தொன்போஸ்கோ பள்ளி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட குழுவும் அடங்கும். உள்ளூர்
நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் நண்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் புதன்
பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாரமும் தூய ஆவியின் கொடைகள்
குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார். தூய ஆவியின் 7 கொடைகள் குறித்த நம் மறைபோதகத்தின்
தொடர்ச்சியாக இந்த நல் ஆலோசனை எனும் கொடை குறித்து நோக்குவோம். இந்த கொடை வழியாக இறைவன்
தன் மீட்புத்திட்டத்திற்கு இயைந்த வகையில் நம் இதயங்களை ஒளிர்வித்து, நம் எண்ணங்களையும்,
வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் வழிநடத்துகிறார். நம்மை இயேசு கிறிஸ்துவை நோக்கியும்,
அவர் வழி, தந்தையாம் இறைவன் நோக்கியும் வழிநடத்தும் தூய ஆவியானவர், மற்றவர்களுடன் ஆன
நம் தொடர்புகளில் நம்மை வழி நடத்தி, விசுவாசத்தின் ஒளியில் நாம் சரியான முடிவுகளை எடுக்க
நமக்கு உதவுகிறார். நல்ல ஆலோசனை எனும் கொடை வழியாக, நாம் விவேகம் எனப்படும் முன்மதியுடன்
வளரவும், நம் சுயநலப்போக்குகளை மேற்கொள்ளக் கற்கவும், இயேசுவின் கண்ணோட்டத்துடன் அனைத்துப்
பொருட்களையும் பார்க்கவும் வழிநடத்தப்படுகின்றோம். ஏனைய ஆன்மீகக் கொடைகள் போல், நல் ஆலோசனை
எனும் இக்கொடையும் செபத்தின் மூலம் உரம்பெற வேண்டும். இதன் வழியாகவே நாம் தூய ஆவியின்
குரலுக்கு செவிமடுப்பவர்களாகவும், இயேசுவின் இதயத்திற்கு இயைந்தவர்களாகவும் மாறுகிறோம்.
நல் ஆலோசனை எனும் இந்தக் கொடை வழியாக தூய ஆவியானவர், திருஅவையின் நம் சகோதர சகோதரிகளின்
வாழ்வு மற்றும் அனுபவங்கள் வழியாகவும் நமக்கு ஆலோசனை வழங்குகிறார். தூய ஆவியின் இந்தக்
கொடைக்காக நன்றிச் சொல்லும் அதேவேளை, விசுவாசத்தின் பாதையில் ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக
இருக்க முயல்வோம். நம் இதயங்களில் தூய ஆவி ஆற்றும் செயல்பாடுகளுக்கு பணிவுள்ளவர்களாகச்
செயல்படுவோம். இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.