2014-05-07 08:29:27

அமைதி ஆர்வலர்கள் – 1922ல் நொபெல் அமைதி விருது(Fridtjof Nansen)


மே.07,2013. எனக்குப் பின்னால் இருக்கும் எனது பாலங்களை உடைத்துவிடுவேன். அப்போது முன்னோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியே கிடையாது என்று சொன்னது மட்டுமல்லாமல் அதற்கேற்ப வாழ்ந்தவர் Fridtjof Nansen. 1922ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதுபெற்ற Fridtjof Nansen, ஆஸ்லோவுக்கு அருகிலுள்ள Store Frøen எனும் ஊரில் 1861ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்தார். இவரது தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர், அதோடு சமய உணர்வு கொண்டவர். தனது சொந்தக் கடமைகள் குறித்து தெளிவான சிந்தனை கொண்டிருந்ததோடு நன்னெறிக் கோட்பாட்டு வாழ்விலும் சிறந்து விளங்கினார். Nansenனின் தாயும் மனஉறுதி கொண்டவர். விளையாட்டு வீரர். எனவே தனது பிள்ளைகளின் உடல்பலத்தை ஊக்குவித்தார். அதோடு வெளியிடங்களில் சுதந்திரமாக நடமாடவும் பழக்கினார். அதனால் Nansen நீச்சல், பனிச்சறுக்கு, உருளுதல் போன்ற விளையாட்டுக்களில் திறமையானவராக இருந்தார். உயரமான, உறுதியான மனிதராக இருந்த இவர், ஒரு நாளில் ஐம்பது மைல்கள்கூட பனிச்சறுக்கு விளையாடுவார். மனநலத்திலும் உறுதியானவராக இருந்ததால், தனது நாயைக் கூட்டிக்கொண்டு நீண்ட பயணங்களை மேற்கொள்வார்.

Nansen, அறிவியல் பாடங்களிலும், ஓவியத்திலும் பள்ளியில் சிறந்து விளங்கியதால் 1881ம் ஆண்டில் ஆஸ்லோவில் பல்கலைக்கழகத்தில் எளிதாகச் சேர்ந்தார். விலங்கியல் பாடத்தை எடுத்துப் படித்த இவர், விளையாட்டிலும், அறிவியலிலும், புதியக் கண்டுபிடிப்புக்களிலும் திறமையை வெளிப்படுத்தினார். அதனால் அனைத்துலக அளவில் இவரது புகழ் பரவியது. 1882ம் ஆண்டில் கிரீன்லாந்தின் கிழக்கு கடற்கரைக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டார். நான்கரை மாதங்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் இவரிலிருந்த அறிவியல் அறிவை மிகுதிப்படுத்தியது. கடல்நாய்கள், பனிக் கரடிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து பின்னாளில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். விலங்கியல் படிப்பில் 1888ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். கிரீன்லாந்தின் உட்பகுதி யாராலும் ஆராய்ச்சி செய்யப்படாததால் Nansen நீண்டகாலமாக அந்நாடு செல்லும் திட்டமிட்டிருந்தார். அந்நாட்டில் மனிதர் வாழாத கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைக் கடக்க விரும்பினார். 1926ம் ஆண்டில் தனது மாணவர்களிடம் தனது திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருந்த Nansen, ஒருவர் தனக்குப் பின்னால் இருக்கும் படகுகளை எரித்துவிட வேண்டும். அப்போது முன்னோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியே கிடையாது என்று சொன்னார். Nansenடன் ஆறுபேர் கொண்ட குழு ஆய்வுப் பயணத்தைத் தொடங்கியது. -45° செல்சியுஸ் குளிரில், கடல்மட்டத்துக்கு 9,000 அடிக்கு உயரமான ஆபத்தான பனிப் பகுதியில் 1888ம் ஆண்டு அக்டோபரில் கிரீன்லாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு ஏறினார். இரண்டு மாதப் பயணம். இறுதியில் பல முக்கிய கண்டுபிடிப்புக்களுடன் இப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் நிறுவனத்தில் பணி செய்து பல கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் எழுதி வெளியிட்டார் Nansen. கிரீன்லாந்தை முதலில் கடந்தது (The First Crossing of Greenland 1890),எஸ்கிமோக்களின் வாழ்க்கை (1891) ஆகிய இவரின் இரு நூல்கள் புகழ்பெற்றவை. மேலும், ஆர்டிக்ட் பகுதியிலும் அறிவியல் சார்ந்த ஆய்வையும் இவர் நடத்தத் திட்டமிட்டார். துருவப் பிரதேசப் பனி நீரோட்டம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கப்பலை வடிவமைத்து அதனை சைபீரிய பனிப் பகுதியில் செலுத்தினார். அக்கப்பல் 35 மாதங்கள் கழித்து நீர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. இப்படி பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த நான்சென், தனது ஆய்வுகளைக் கைவிட்டு, சுவீடனிடமிருந்து நார்வே விடுதலை அடைய வேண்டுமென்பதற்காக 1905ம் ஆண்டில் நடவடிக்கையில் இறங்கினார். பின்னர் சில ஆண்டுகள் துருவப் பகுதிகளில் பெருங்கடல் ஆய்வுகளை மேற்கொண்டார். 1914ம் ஆண்டில் முதல் உலகப்போர் தொடங்கியவுடன் இந்த ஆய்வுகளை நிறுத்தினார். அத்தியாவசிய உணவுப்பொருள்கள் கப்பலில் எடுத்துச்செல்வதற்கான தடை அகற்றப்பட, நார்வே நாட்டுப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் என்ற முறையில் வாஷிங்டனில் 1917ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டுவரை முயற்சித்து வெற்றி கண்டார். 1919ல் உலக நாடுகளின் கூட்டமைப்பின் நார்வே கழகத்தின் தலைவரானார். பாரிசில் நடந்த கூட்டத்தில் சிறிய நாடுகளின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட பாடுபட்டார் Nansen.

1920ம் ஆண்டில், உலக நாடுகளின் கூட்டமைப்பு, போர்க் கைதிகள் தாயகங்களில் குடியமர்த்தப்படும் பொறுப்பை நான்செனிடம் ஒப்படைத்தது. இக்கைதிகளில் பலர் இரஷ்யாவில் இருந்தனர். அடுத்த ஒன்றரை மாதங்களில் 4 இலட்சத்து 50 ஆயிரம் கைதிகள் தாயகங்களில் குடியேறச் செய்தார் Nansen. அனைத்துலகச் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற நிறுவனங்களால் உந்தப்பட்டு, உலக நாடுகளின் கூட்டமைப்பு அகதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை நான்செனிடம் கொடுத்தது. சொந்த நாடுகள் இல்லாத அகதிகளுக்கு, “நான்சென் கடவுட்சீட்டு” என்ற அடையாள ஆவணத்தை வழங்கினார். இதனை 52 அரசுகள் அங்கீகரித்தன. இந்தப் பணியில் 9 ஆண்டுகள் இருந்த நான்சென், பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு மறுவாழ்வளித்தார். 1921 முதல் 1922 வரை பஞ்சத்தால் இலட்சக்கணக்கான இரஷ்யர்கள் இறந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறு செஞ்சிலுவை சங்கம் நான்செனைக் கேட்டது. இரஷ்யாவுக்கு உதவினால் மேற்கத்திய நாடுகளின் சந்தேகத்துக்கு ஆளாக நேரிடும். ஆயினும் நான்சென் உதவினார். இறுதியில் 7 இலட்சம் முதல் 2 கோடியே 20 இலட்சம் பேருக்கு உதவினார் Nansen. 1922ல், கிரேக்க அரசின் வேண்டுகோளின்பேரில், கிரேக்க அகதிகளின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். துருக்கியில் வாழ்ந்த ஏறக்குறைய 12 இலட்சத்து 50 ஆயிரம் கிரேக்கர்களுக்குப் பதிலாக, கிரேக்கத்தில் வாழ்ந்த ஏறக்குறைய 5 இலட்சம் துருக்கியர் வாழ உதவினார். இவர்கள் புதிய வாழ்வு வாழவும் வழி செய்தார். சிரியாவிலும் லெபனனிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வாழ உதவியுள்ளார்.

இவ்வாறு பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி, அமைதிக்கும், போர்க் கைதிகள் மற்றும் அகதிகள் நல்வாழ்வுக்கும் பணி செய்துள்ளவர் Fridtjof Nansen. இவருக்கு 1922ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. மேலும், 1923, 1924ம் ஆண்டுகளில் நொபெல் அமைதி விருது எவருக்கும் வழங்கப்படவில்லை. அவ்வாண்டுகளின் விருது நிதி, அவ்விருதுப் பிரிவின் சிறப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.