2014-05-06 08:23:28

வாரம் ஓர் அலசல் – மன்னிப்பு செயலில் வெளிப்படட்டும்


RealAudioMP3 மே,05,2014. ஒருநாள் ஓர் ஊரில் ஒரு துறவியும் அவரது சீடரும் தங்கள் தவச்சாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு முரடன் அவ்விருவரையும் வழிமறித்து, போலித் துறவிகள் இருவரும் எங்கே போகிறீர்கள் என்று ஏளனமாகக் கேட்டான். துறவி பதிலேதும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தார். ஆனால் துறவியோடு சென்றுகொண்டிருந்த சீடர் சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக்கொண்டார். அவர்களை வம்புக்கு இழுத்த முரட்டு வழிப்போக்கன் அவர்களை எளிதில் விடுவதாக இல்லை. ஊரை ஏமாற்றுவதற்காக இந்தக் காவி உடையைப் போட்டிருக்கிறீர்கள் என்று எல்லாரும் சொல்கிறார்களே, இது உண்மைதானா என்று கேட்டான். துறவியின் முகத்தில் இருந்த புன்னகை குறையவேயில்லை. ஆனால் அவருடன் சென்ற சீடர் கோபத்தில் அவனது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார். அக்கணமே துறவி சீடரைவிட்டு விலகி வேகமாக நடக்கத் தொடங்கினார். சீடருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒடிச்சென்று, துறவியிடம், சுவாமி, நான் செய்த பிழை என்ன என்று அழுதபடி கேட்டார். அதற்கு துறவி, மகனே, நீ கோபத்தின் பிடியில் சிக்காதவரை வானத்து தேவதைகள் உன்னில் குடியிருந்தன. அதனால்தான் நான் உன்னிடம் நெருங்கியிருந்தேன். ஆனால் நீ சினமுற்று, வன்மையான வார்த்தைகளால் வசைபாடி உன் உடல்வலிமையைக் காட்டிய கணநேரத்தில், உன் ஆன்மாவை அசுரர்கள் ஆக்ரமித்துக்கொண்டனர். எனவேதான் உன்னிடமிருந்து நான் விலக நேர்ந்தது என்று விளக்கிய துறவி தன் வழியே நடந்தார்.
கோபம் எப்போதும் பகைமைக்குப் பால் வார்க்கும். பகையைக் கொண்டு பகையை ஒருபோதும் வெல்ல முடியாது. பகையை வெல்வது அன்பும் மன்னிப்பும் ஒப்புரவும் மட்டுமே. ஒருமுறை பூர்மா என்ற துறவி புத்தரிடம் வந்து, ஸ்ரோண பரந்தகர்கள் வாழும் பகுதியில் புத்த தர்மத்தைப் போதிக்கச் செல்கிறேன், என்னை ஆசீர்வதியுங்கள் என்று அவர் முன்னர் மண்டியிட்டார். அப்போது புத்தர் அவரிடம், நீ தர்மத்தைப் போதிக்கும்போது அப்பகுதி மக்கள் உன்னை வசைபாடி நிந்தனை செய்தால் என்ன செய்வாய் எனக் கேட்டார். இவர்கள் நல்லவர்கள், கைநீட்டி காயப்படுத்தாமல், வாயளவோடு நிற்கிறார்களே என மகிழ்வேன் என்று சொன்னார் பூர்மா. வாயினால் வசைபாடியவர்கள் உன்னை கைநீட்டி அடிக்கவும் செய்யலாம், அப்போது என்ன செய்வாய் என மீண்டும் கேட்டார் புத்தர். இவர்கள் எவ்வளவு நல்லவர்கள், ஆயுதங்களால் தாக்காமல் கைநீட்டி அடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார்களே என உளம் மகிழ்வேன் என்று சொன்னார் பூர்மா. புத்தர் மறுபடியும், சரி. அவர்கள் ஆயுதங்களால் தாக்கினால் அதை எப்படி நீ எதிர்கொள்வாய் எனக் கேட்டதும், இவர்கள் மிக மிக நல்லவர்கள், பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொருவரும் எப்படி எப்படியோ முயற்சி செய்யும்போது எனக்கு இவர்கள் எளிதாக முத்திக்கு வழி சொல்லிவிட்டார்களே என இதயம் மகிழ்ந்து இருகரம் கூப்பி வாழ்த்துவேன் என்றார் பூர்மா. இதைக் கேட்ட புத்தர், பூர்மா, உனக்கு புத்த ஞானம் கனிந்துவிட்டது, போய் வா என ஆசீரளித்து அனுப்பி வைத்தார்.
கோபமும், பழிவாங்கும் எண்ணமும் இருந்தால் மனிதர் நினைத்த நேரத்தில் விலங்குகளாக மாறிவிடுவார்கள். அவர்களிடம் மனிதப்பண்பு இருக்காது. மனிதப்பண்பற்ற சமூகத்தில் வன்முறைகளும் கொலைவெறிகளும் பழிவாங்குதலுமே இருக்கும். அன்பு, அமைதி போன்ற நற்பண்புகளைக் காண்பது அரிதாக இருக்கும். இந்த உலகம் எத்தனையோ சிறிய பெரிய போர்களை அனுபவித்துள்ளது. அக்கால ஐரோப்பிய வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எத்தனை சண்டைகள் நடந்துள்ளன எனத் தெரிந்துகொள்ளலாம். முதல் உலகப் போரின் அனுபவம் போதாது என்று இரண்டாவது உலகப் போரும் மூண்டது. ஜெர்மனியில் அடால்ப் கிட்லர் பதவியேற்ற சில வாரங்களுக்குள்ளேயே, தக்காவ் வதைமுகாம் உருவாக்கப்பட்டது. 12 ஆண்டுகளில் இரண்டு இலட்சம் யூதர்கள் அங்கு வைக்கப்பட்டனர். 1945ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அமெரிக்கப் படைவீரர்கள் இந்த முகாமை விடுவிப்பதுவரை குறைந்தது 41,500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பசியாலும் நோயாலும் இறந்தனர். 1943ம் ஆண்டில் போலந்தின் வார்சா நகரை நாத்சிப் படைகள் சுற்றி வளைத்தபோது 3 இலட்சம் யூதர்கள் கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். கிட்லரின் யூதஇன விரோதப் போக்குக் கொள்கையால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பல்வேறு வதைமுகாம்களில் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். இது தவிர பல்வேறு நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில், இனவெறுப்புக்களில், மதவெறிகளில், அரசுத்தலைவர்களின் அராஜகப் போக்குகளில், என பலவற்றில் கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் அமெரிக்கர்கள் உட்பட முப்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர். 1973ம் ஆண்டில் அமெரிக்கா இப்போரிலிருந்து விலகிக் கொண்டதால் வியட்னாம் போர் முடிவுக்கு வந்தது. இன்றும் பல நாடுகளில் ஆயுதம் ஏந்திய வன்முறைகளில் எண்ணற்ற அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
ஒரு நாட்டில், போர் முடிவுக்கு வரும் நிலையில் வெறோரு நாட்டில் சண்டை தொடங்கி விடுகின்றது. போர் முடிந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களைக் குணப்படுத்தி ஒப்புரவு உணர்வை ஏற்படுத்தவும், போரிட்ட எதிர்தரப்புக் குழுக்கள் மத்தியில் ஒப்புரவு நடவடிக்கைகளைத் தொடங்கவும் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போர்களில் பலியானவர்களை நினைவுகூருவதற்கென, 2010ம் ஆண்டு மே 2ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அனைத்து ஐ.நா. நிறுவனங்களும், அரசு-சாரா அமைப்புகளும், தனிமனிதரும் போர்களில் பலியானவர்களை நினைவுகூருமாறு அழைப்புவிடுத்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த 60ம் ஆண்டு நிறைவு ஆண்டான 2010, மே இரண்டாம் வாரத்தில் ஐ.நா.பொது அவை சிறப்பு அவையைக் கூட்டி போரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. இதை எல்லா நாடுகளும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டது. அதன்படி ஆண்டுதோறும் மே 8, 9 தேதிகளில் போர்களில் பலியானவர்களை நினைவுகூருகிறது உலகம். நினைவுகூர்ந்தால் மட்டும் போதாது, போரின் வடுக்கள் நீக்கப்பட்டு நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையேயும் ஒப்புரவு ஏற்பட வேண்டுமென்றும் இந்த உலக நாள்களில் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தக்காவ் வதைமுகாமில் 2013ம் ஆண்டில் இடம்பெற்ற இந்த நினைவு நிகழ்வில் ஜெர்மன் நாட்டின் பிரதமர் ஆஞ்சலா மெர்க்கெல் கலந்துகொண்டார். தனது நாட்டினர் அனைவர் பெயராலும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார் மெர்க்கெல். தக்காவ் வதைமுகாமில் இத்தகைய நிகழ்வில் ஜெர்மன் நாட்டு அரசியல் தலைவர் ஒருவர் கலந்துகொண்டது அதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர், 1970ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெர்மன் பிரதமர் வில்லி பிராண்ட், வார்சா சென்று, அங்கிருக்கும் போர் நினைவிடத்தில் மண்டியிட்டு கரங்களைக் கூப்பி அமைதியில் செபித்தார். இவ்வளவு மரணங்களும் துன்பங்களும் ஏற்படக் காரணமான தனது நாட்டின் முந்தைய மக்களின் செயல்களுக்காக மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார். கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக இக்காலத்துத் தலைவர்கள் பொதுப்படையாக மன்னிப்புக் கோருகிறார்கள். ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டின் பூர்வீக இன மக்களுக்குச் செய்த கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் 2008ம் ஆண்டில் மன்னிப்புக் கேட்டது. ஆனால் இத்தகைய மன்னிப்புகள் பற்றி அலசிய ஓர் ஆர்வலர் சொன்னார் : “மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. அந்தந்த மக்களுக்குரிய அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காலம் காலமாய் நசுக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாய் வாழ்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும்” என்று. இலங்கையில் 2009ம் ஆண்டில் இரத்தம் சிந்தும் போர் முடிவுக்கு வந்தாலும், இன்றும் அங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
கடந்த காலத் தவறுகளுக்குப் பொதுப்படையாக மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது. தனது அரசு, நிவாரண நடவடிக்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் செய்கின்றது என்று பறை அறிவித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஊடகங்களுக்குப் புகைப்படங்களை அனுப்பி விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மாறாக உண்மையிலேயே நலத்திட்டங்கள் செயலில் காட்டப்பட வேண்டும். செயலில் வெளிப்படாத எந்த ஒரு பேச்சும் செத்த பேச்சாகும். அந்தப் பேச்சுக்கு முகஸ்துதி கிடைக்கலாம். ஆனால் உளமார்ந்த பாராட்டு கிடைக்காது. மனிதப் பண்புகொண்ட எவரும் அந்தப் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். தான் என்ற அகந்தை எங்கே விருட்சமாக வேரூன்றுகிறதோ அங்கே எந்த நல்ல பண்புகளையும் எதிர்பார்க்க முடியாது. தனது நலம், தனது வசதிகள் என்று பார்ப்பவரிடம் எந்த நற்செயல்களும் வெளிப்படாது.
அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்களே. அவர்கள் பேசும் பேச்சு உயிரற்ற வெறும் கிண்கிணி ஒலியே என்று ஆங்கில அறிஞர் பேகன் சொன்னார். அன்பு இருக்கும் இடத்தில்தான் ஆண்டவன் இருப்பார். அன்புக்கு வேற்றுமை இல்லை, பகைமை இல்லை, ஆணவம் இல்லை, தன்னலம் இல்லை என்று புனித பவுல் அடிகளாரும் சொன்னார். பிறர் துயர் தீர்க்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.
அன்பு நெஞ்சங்களே, நாடுகளின் தலைவர்கள் பற்றிச் சிந்திப்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாய்ச்சொல்லாலும், நினைவுகளாலும், சைகைகளாலும், செயல்களாலும் பிறருக்குக் கெடுதல் செய்திருப்போம், அநீதிகள் இழைத்திருப்போம். நம்மால் மனத்தளவிலும், உடலளவிலும் காயமடைந்துள்ள மனிதரிடம் மன்னிப்புக் கேட்போம், அந்த மன்னிப்பைச் செயல்களில் காட்டுவோம். நல்ல செயல்களை அவர்களுக்காகச் செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.