2014-05-06 16:08:48

மே 07, புனிதரும் மனிதரே – திருத்தந்தையால் புகழப்பட்ட பெண் கல்வியாளர் - புனித Rosa Venerini


1716ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24ம் தேதி, திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், எட்டுக் கர்தினால்களுடன், உரோம் நகரில் இயங்கிவந்த ஒரு பள்ளிக்குச் சென்றார். பெண்களுக்கென 3 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அப்பள்ளியில் திருத்தந்தையும், கர்தினால்களும் காலைப்பொழுது முழுவதையும் கழித்தனர். பள்ளியிலிருந்து கிளம்பும்போது, திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், அப்பள்ளியை நிறுவிய Rosa என்ற பெண்ணிடம், "நாங்கள் செய்ய முடியாத ஒரு பணியை நீங்கள் செய்து வருகிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி. இதுபோன்ற பள்ளிகள் வழியே, நீங்கள் உரோம் நகரைப் புனிதமாக்குவீர்கள்" என்று கூறி, விடைபெற்றார்.
இப்பள்ளியைத் துவக்கிய Rosa அவர்களுக்கு, அப்போது வயது 60. இவர் தன் வாழ்வின் 40 ஆண்டுகளை பெண்கள் கல்விக்கென அர்ப்பணித்தவர். "பக்தியுள்ள ஆசிரியர்கள்" என்ற துறவு சபையை உருவாக்கி, பெண்கள் கல்விக்கென உழைப்பதற்கு பல இளம்பெண்களை இணைத்துப் பணியாற்றியவர் Rosa.
பெண் கல்வி என்பது ஒரு புரட்சி என்ற எண்ணம் அக்காலத்தில் இத்தாலியில் பரவி இருந்ததால், இவர் துவக்கியப் பணிக்கு பல வழிகளில் எதிர்ப்புக்கள் இருந்தன. இவரும், இவருடன் இணைந்த பெண்களும் பலமுறை அம்புகளால் தாக்கப்பட்டனர். இவர்கள் நடத்தி வந்த பள்ளிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இருப்பினும், Rosa அவர்களும் அவருடன் இணைந்த பெண்களும் மனம் தளராமல் கல்விப் பணி புரிந்ததால், அப்பகுதி ஆயர் அவர்களை ஆதரித்து, மேலும் பல பள்ளிகளைத் துவக்க ஊக்குவித்தார்.
இறுதியில், Rosa அவர்கள் உரோம் நகர் அடைந்து, அங்கும் பள்ளிகள் துவங்கி, திருத்தந்தையின் ஆதரவையும் பெற்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உரோம் நகரில் பெண்களுக்குக் கல்விப் பணியாற்றிய Rosa அவர்கள், 1728ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி, தன் 72வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2006ம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். புனித Rosa Venerini அவர்களின் திருநாள், மே மாதம் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.