2014-05-06 08:19:02

மே 06,2014 புனிதரும் மனிதரே : கடும் நோயிலும் பிறரை நினைத்தவர்(St. Seraphina)


அவர் தனது வளர்இளம் பருவத்திலேயே திடீரென ஒரு புதிரான கொடிய நோயினால் தாக்கப்பட்டார். அதேசமயத்தில் அவரது தந்தையும் திடீரென இறந்தார். அந்தச் சிறுமியின் தலை, கைகள், கண்கள், கால்கள், உள்உறுப்புக்கள் என அனைத்தும் அந்த நோயினால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையானார். தனது அழகான தோற்றத்தையே இழந்தார் அவர். தன்னை ஒரு கடினமான மரப்பலகையில் கிடத்தச் சொன்னார். இதிலே ஆறு ஆண்டுகள் அசையாமல் படுத்திருந்தார். இதனால் உடம்பு முழுவதும் படுக்கைப் புண்ணாகிவிட்டது. இவரது தாய் பிச்சை எடுப்பதற்கு அல்லது வேறு வேலை செய்வதற்கு வெளியே செல்லும் நேரங்களில் எல்லாம் வீட்டில் தனியாகவே இருப்பார் அந்தச் சிறுமி. அவர் எப்பொழுதும் தனக்கு எதிரே தொங்கிய பாடுபட்ட சிலுவையைப் பார்த்துக்கொண்டே படுத்திருப்பார். ஆண்டவரே, எனது காயங்களை அல்ல, உமது காயங்ளை நினைத்தே வாடுகிறேன் எனச் செபிப்பார். இந்தப் பரிதாபமான நிலையில் இவரது தாயும் இறந்தார். அக்கம்பக்கத்தார் இச்சிறுமிக்கு உதவி செய்வதற்கு முன்வந்தனர். ஆனால் உடம்பிலிருந்து வந்த துர்நாற்றத்தைக் கண்டு பின்வாங்கினார்கள். ஆயினும் Beldia என்ற பக்தியுள்ள நண்பர் இச்சிறுமிக்கு உதவினார். புனித பெரிய கிரகரிமீது பக்திகொண்ட இச்சிறுமி இறப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்னர், அப்புனிதர் காட்சி கொடுத்து தனது விழா நாளில் இவரை கடவுள் தனது வீட்டுக்குள் அழைத்துக்கொள்வார் என்று கூறினார். அதன்படியே இறந்தார் அச்சிறுமி. இவர்தான் ஃபினா அல்லது செராப்பினா. செராப்பினா இறந்த பின்னர் இவர் படுத்திருந்த பலகை முழுவதும் வெள்ளை மற்றும் வயலட்டு நிறங்களில் அழகான மலர்களால் நிறைந்திருந்தன. செராப்பினா இறந்து கிடத்தப்பட்டிருந்தபோதே, Beldiaவின் காயமடைந்திருந்த கரத்தைக் குணப்படுத்தினார். புனித செராப்பினாவின் பரிந்துரையால் பல புதுமைகள் நடந்தன. இப்புனிதரின் விழா மார்ச் 12. கி.பி.1253ம் ஆண்டில் இத்தாலியின் டஸ்கனி மாநிலத்தில் சான் ஜெர்மினியானோ என்ற ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் புனித செராப்பினா. ஏழ்மையிலும் தனக்குக் கிடைக்கும் உணவில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பார் புனித செராப்பினா

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.