2014-05-05 16:49:39

திருத்தந்தை: நம்மைப் புனிதப்படுத்துவதிலிருந்து தடுக்கும் மூன்று தீமைகள்


மே 05,2014. பணத்திற்காகவும், அதிகாரத்தின்மேல் கொண்ட மோகத்திற்காகவும் இயேசுவைப் பின்பற்றவிரும்பும் சிலர் திருஅவையில் இருக்கும் அதேவேளை, இயேசுவோ, நாம் அவரை அன்புகூர்ந்து பின்பற்றுவதற்கான அருளை நமக்கு வழங்குபவராக உள்ளார் என இத்திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலைத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, நாம் இயேசுவைப் பின்பற்றுவது அவர் மீதுகொண்ட அன்பாலா அல்லது நம் சுய நலன்களுக்காகவா என்ற கேள்வியை முன்வைத்தார்
வெறும் புகழுக்காக நல்லச் செயல்களை ஆற்றுவோர், அதிகாரத்தின்மீது மோகம் கொண்டு அலைவோர், பணத்தின்மீது பேராசை கொண்டோர் என மூன்று விதமான செயல்பாடுகள் நம்மையே நாம் புனிதப்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுக்கின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவைகளைவிட்டு அகன்று கிறிஸ்துவை மட்டுமே பின்பற்றும் மனநிலையை நமக்குத் தரவேண்டும் என அவர் அருளை வேண்டுவோம் என எடுத்துரைத்தார்.
மேலும், இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில், 'நற்செய்தி அறிவிப்பு என்றால் என்ன?' என்ற கேள்வியைக் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், 'நாம் யார், நம் நம்பிக்கை என்ன என்பதற்கும் மகிழ்வுடனும் எளிமையுடனும் சாட்சி பகர்வதே அது' என்ற பதிலையும் தந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.