2014-05-05 16:50:17

திருத்தந்தை : கிறிஸ்தவ மதிப்பீடுகள் மற்றும் விசுவாசத்தின் சாட்சிகளாக துணிச்சலுடன் செயல்படுங்கள்


மே 05,2014. மக்கள் நலனை மனதில்கொண்டு சமூக மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கத்தோலிக்கத் தலைவர்கள், கிறிஸ்தவ மதிப்பீடுகளை துணிச்சலுடன் எடுத்துரைப்பவர்களாக, விசுவாசத்தின் சாட்சிகளாக செயல்படவேண்டும் என புருண்டி நாட்டு ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மைகால வன்முறைகளாலும் பிரிவினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள புருண்டி நாட்டு காயங்கள் ஆறவேண்டுமெனில் மன்னிப்பும் சகோதரத்துவ அன்பும் கொண்ட உண்மையான மனமாற்றம் இடம்பெறவேண்டும் என்ற அழைப்பை, 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்த புருண்டி ஆயர்களிடம் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், குருக்கள் மற்றும் துறவறத்தாரின் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கல்வி, நல ஆதரவு, அகதிகள் பணி என பல்வேறு துறைகளில் சேவையாற்றும் புருண்டி நாட்டு துறவறத்தார், தங்கள் வாழ்வு மூலம் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்துவருகின்றனர் எனவும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மிகக் கொடுமையான ஏழ்மையின் சூழலில் வன்முறையும், பிரிவினைகளும் அந்நாட்டில் மேலும் தொடர்ந்து இடம்பெறுவது குறித்த ஆழ்ந்த கவலையையும் புருண்டி ஆயர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.