2014-05-05 16:50:53

திருத்தந்தை : எம்மாவுஸ் பயண நிகழ்வு நம் விசுவாசப் பயணத்தில் ஓர் அடையாளம்


மே 05,2014. எம்மாவுஸ் செல்லும் பாதையில் அப்பத்தைப் பிட்டபோது வார்த்தையால் ஒளிபெற்ற சீடர்களின் நிகழ்வு, நம் விசுவாச வாழ்வுப் பயணத்தில் ஓர் அடையாளமாக உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று குழுமியிருந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவை சந்திக்கும் நிகழ்வுகளில் விவிலியமும் திருநற்கருணையும் இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தினார்.
மனிதர்கள் சோகத்தில் இருக்கும்போது விவிலியத்தை வாசிப்பதும், ஞாயிறு திருப்பலியில் பங்குகொள்வதும் அவசியம், ஏனெனில், இறைவார்த்தையும் திருநற்கருணையும் மகிழ்வைக் கொணர்கின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எம்மாவுஸ் செல்லும் பாதையில் இரு சீடர்கள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வு குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், உக்ரைன் நாட்டிற்காகவும், ஆப்கானிஸ்தானிற்காகவும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார். உக்ரைனில் இடம்பெறும் பதட்ட நிலைகள் முடிவுக்கு வரவும், ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்பதாகவும் உறுதி அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.