2014-05-03 18:23:18

மே 04, புனிதரும் மனிதரே – “தீயில் ஏறி விண்ணகம் செல்வேன்” - புனித ஃப்ளோரியன்


படைத்தளபதி ஒருவரை நெருப்பில் எரித்துக் கொல்வதற்கு, உரோமைய வீர்கள் அவரை ஒரு தூணில் கட்டி, சுற்றிலும் நெருப்பு மூட்டத் தயாராக இருந்தனர். அவ்வேளையில், "நெருப்பு மூட்டுங்கள். கொழுந்துவிட்டு எரியும் தீயை, என் படிக் கற்களாகப் பயன்படுத்தி, நான் விண்ணகம் ஏறிச் செல்வேன்" என்று அத்தளபதி, வீரகளிடம் சவால் விட்டார். அவர் சொன்னதுபோலவே நடந்துவிடும் என்று பயந்த வீரர்கள், அவரை ஓர் எந்திரக்கல்லுடன் கட்டி, கடலில் எறிந்து கொன்றனர்.
இவ்விதம் கொல்லப்பட்டத் தளபதியின் பெயர் ஃப்ளோரியன் (Florian). கி.பி. 3ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஃப்ளோரியன், தன் திறமையால், உரோமையப் படையில் வெகு விரைவில் பதவி உயர்வு பெற்று, தளபதியானார். அதே நேரம், தீயணைக்கும் படையினருக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உரோமையப் பேரரசில், பகைமை உணர்வுகளால், அடிக்கடி பல இடங்களில் தீவைப்பு முயற்சிகள் நிகழ்ந்த காலம் அது. எனவே, தீயணைக்கும் வீரர்களுக்கு, ஃப்ளோரியன் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார். அவரது தலைமையின் கீழ், தீயணைப்புப் படை, சிறப்பாக பணியாற்றி, மிகுந்த புகழ் பெற்றது.
ஃப்ளோரியனின் விரைவான முன்னேற்றத்தையும், அவர் அடைந்த புகழையும் கண்டு, பொறாமை கொண்ட மற்ற அதிகாரிகள், அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை அறிந்ததும், உரோமைய அரசரிடம் தெரிவித்தனர்.
செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த அரசன், ஃப்ளோரியனை, உரோமையக் கடவுள்களை வழிபட கட்டளையிட்டார். ஃப்ளோரியன் மறுப்புச் சொல்லவே, அவரைக் கொல்ல உத்தரவிட்டார்.
கடலில் எறிந்து கொல்லப்பட்ட ஃப்ளோரியனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரைச் சுற்றி வணக்க முயற்சிகள் விரைவில் பரவின. புனித ஃப்ளோரியனின் திருநாள், மே 4ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. புனித ஃப்ளோரியன், ஆஸ்திரியா நாட்டின் பாதுகாவலர்களில் ஒருவராகவும், தீயணைப்புப் படை வீரர்களுக்குப் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.