2014-05-01 09:45:42

மே01,2014. புனிதரும் மனிதரே : இயேசுவுக்கு ஒரு மடல்(St. Addal)


அக்காலத்தில் Abgar அரசப் பரம்பரை, கிரேக்க நாட்டின் வடக்கேயுள்ள Edessaவைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆட்சி செய்து வந்தது. இந்தப் பரம்பரையைச் சேர்ந்த 5ம் Abgar Ouchama என்ற அரசர் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. இதை வரலாற்று ஆசிரியர் யுசேபியுஸ் எழுதி வைத்துள்ளார். அரசர் 5ம் Abgar குணமாக்க இயலாத தீராத மற்றும் வேதனை மிகுந்த ஒரு நோயினால் துன்புற்றார். இந்நோய் தொழுநோயாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இயேசுவின் வல்லமையையும், அற்புதங்களையும் கேள்விப்பட்டு இயேசுவுக்கு ஒரு கடிதம் எழுதினார் அரசர் 5ம் Abgar. சிரியாக் மொழியில் எழுதப்பட்ட இக்கடிதம், அர்மேனிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இயேசு இறந்தோரை உயிர்த்தெழச் செய்தது, பல தீராத நோயாளிகளைக் குணமாக்கியது உட்பட இயேசு நிகழ்த்திய பல புதுமைகளையும், அவரது போதனைகளையும் பாராட்டியதோடு தன்னை வந்து குணமாக்குமாறு கடிதம் எழுதினார் அரசர் Abgar Ouchama. இயேசுவே யூதர்கள் உமக்கெதிராகச் செயல்பட்டு உம்மைக் கொடுமைப்படுத்தினர் என அறிந்தேன். நான் வாழும் Edessa நகரம் நாம் இருவரும் வாழ்வதற்குப் போதுமானது, அதோடு இது அமைதியான நகரம் என்றெல்லாம் அக்கடிதத்தில் எழுதியிருந்தார் அரசர் 5ம் Abgar. இந்தக் கடிதத்தை யூதர்களின் தலைமைக்குருவின் இல்லத்தில் பெற்ற இயேசு, அரசர் Abgarன் தூதரும் செயலருமாகிய Hannan வழியாக பதில் சொல்லி அனுப்பினார். கண்டு விசுவசிப்போரைவிட காணாமல் விசுவசிப்போர் பேறுபெற்றோர் எனவும், தான் விண்ணகத்துக்குத் தமது தந்தையிடம் சென்ற பின்னர் தமது திருத்தூதர்களில் ஒருவரை அனுப்பி அரசரின் நோயினின்று குணமடைய உதவுவதாகவும் பதில் அனுப்பினார் இயேசு. அரசர் Abgarக்கு இயேசு அளித்த வாக்குறுதியின்படி திருத்தூதர் புனித தோமையரால் அரசர் Abgarடம் அனுப்பப்பட்டவரே புனித Addal. இப்புனிதர் அரசரின் தீராத நோயைக் குணமாக்கினார். பின்னர் அரசரும் கிறிஸ்தவத்தைத் தழுவினார். இயேசுவின் 72 சீடர்களில் ஒருவராகிய புனித Addal, 2ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் Edessa பகுதியில் நற்செய்தி அறிவித்து 180ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.