2014-05-01 16:29:43

மே,02,2014 புனிதரும் மனிதரே : மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த ஆயர்(St. Elphege or St. Alphege)


டென்மார்க்கைச் சேர்ந்த டான்(Dane) இனத்தவர் 1006ம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்தை ஆக்ரமித்தனர். அச்சமயம் இங்கிலாந்தை ஆட்சி செய்த அரசர் Ethelred பலவீனமானவராக இருந்ததால் டானியர்கள் இங்கிலாந்தில் விருப்பமான இடத்தை ஆக்ரமித்து காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டனர். டானியர்களின் வெறித்தனமான செயல்கள் இங்கிலாந்தில் அரங்கேறின. அப்போது பேராயருக்குரிய பால்யம் என்ற கழுத்துப்பட்டையைப் பெறுவதற்காக உரோமைக்குச் சென்றிருந்த பேராயர் எல்பீஜ் கான்டர்பரி திரும்பினார். அவருக்கு இருந்த ஆபத்தைப் பார்த்து அவரை வேறு இடத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிடுவதற்கு அரச குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் பேராயர் எல்பீஜ் தனது மக்களைவிட்டு வேறெங்கும் செல்லமாட்டேன் என உறுதியாகச் சொல்லிவிட்டார். அதற்கு மாறாக, சண்டை நடந்த இடத்துக்குச் சென்று, அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டாம், இவர்களின் குருதியைச் சிந்துவதால் உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது, உங்கள் கோபத்தை என்மீது காட்டுங்கள் என்று எதிரிகளிடம் கத்தி கத்தி வேண்டிக்கொண்டார். அதேசமயம் தனது மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி அவர்களுக்கு திருநற்கருணை வழங்கி ஊக்கப்படுத்தினார். பின்னர் எதிரிகள் பேராயரைப் பிடித்து எப்படியெல்லாம் சித்ரவதை செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்தார்கள். கான்டர்பரியை முழுவதுமாக எரித்தார்கள். பேராயரின் முகத்தைக் கிழித்தார்கள், இரக்கமின்றி அடித்து உதைத்தார்கள். இருட்டறையில் பல மாதங்கள் அடைத்து வைத்தனர். கொதிக்கும் இரும்பின்மீது படுக்கவைத்தனர். அச்சமயம் டானியர்களின் இராணுவத்தைக் கொடிய கொள்ளைநோய் தாக்கிப் பலர் இறந்தனர். இந்தக் கொள்ளை நோய் புனிதப் பேராயரின் சாபம் என்று பயந்த அவர்கள் அவரைச் சிறையிலிருந்து இழுத்து வந்தனர். அவரும் செபித்து ரொட்டிகளை ஆசீர்வதித்து அவர்களுக்குக் கொடுக்க அவர்கள் கொள்ளை நோயிலிருந்து குணமானார்கள். பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவதற்குப் பிணையல்தொகையாக நிறைய பொன் கேட்டார்கள். உண்மையான ஞானத்தைத் தவிர வேறு செல்வம் என்னிடம் கிடையாது என்று பேராயர் சொன்னார். இதனால் பேராயர் எல்பீஜீன் தலையைக் கோடரியால் பிளந்து கல்லால் எரிந்து கொன்றுபோட்டனர். புனித பேராயர் எல்பீஜ் அவர்களின் மறைமாவட்டத்தில் அவர் காலத்தில் ஏழைகளே கிடையாது. அல்பீஜ் எனவும் அழைக்கப்படும் புனித பேராயர் எல்பீஜின் விழா ஏப்ரல் 19.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.