2014-04-30 16:51:25

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்.30,2014. இரு திருத்தந்தையர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த திருப்பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி இன்னும் உரோம் நகரின் முக்கிய திருத்தலங்களை சந்தித்து வருவதால், நகரம் தொடர்ந்துத் திருவிழாக்கோலம் பூண்ட நிலையிலேயே இருக்க, இப்புதனன்று திருத்தந்தையின் மறைபோதகத்திற்கு செவிமடுக்க வந்த கூட்டத்தால் தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிந்தது. மே முதல் தேதி விடுமுறை என்பதாலும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் உரோம் நகருக்கு இந்நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் வந்துள்ளனர். தன் புதன்மறைபோதகங்களில் தூய ஆவியின் ஏழு கொடைகள் குறித்து தன் சிந்தனைகளை விசுவாசிகளோடுப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று 'புரிந்துகொள்ளுதல்' எனும் கொடை குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
நம் விசுவாசம் மற்றும் திருமுழுக்கு வழியாக இறைவனின் வாழ்வில் பங்குபெறுவதிலிருந்து பிறக்கும் 'புரிந்துகொள்ளுதல்' எனும் கொடை, அன்பெனும் இறைவனின் முடிவற்ற திட்டம் அனைத்துப் பொருட்களிலும் வெளிப்படுத்தப்படுவதை புரிந்துகொள்ள உதவுகிறது. தூய ஆவியானவர் நம் இதயங்களில் குடியிருந்து நம் மனங்களை ஒளிர்வித்து கிறிஸ்துவின் படிப்பினைகளையும் அவரின் மீட்புத் திட்டத்தையும் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வழிநடத்துகிறார்.
எம்மாவுஸ் சென்ற பாதையில் சீடர்கள் எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளவில்லையோ அவ்வாறு நாமும் பலவேளைகளில் நம் அருகில் நடந்துவரும் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள தவறுவதோடு, நம் வாழ்விலும் நம்மை சுற்றியுள்ள உலகிலும் கடவுளின் அருள் ஆற்றும் செயல்பாடுகளையும் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். இருப்பினும் தூயஆவி தரும் 'புரிந்துகொள்ளுதல்' எனும் கொடை நம் கண்களை திறக்கவைத்து நம் இதயங்களை நமக்குள்ளேயே கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது. இதன் வழி நாம் உயிர்த்த கிறிஸ்துவின் இருப்பை புரிந்துகொள்வதோடு புத்துணர்வுடன் கூடிய ஆன்மீக உள்ளொளியுடன், புதுக்கண்ணோட்டத்துடன் அனைத்தையும் நோக்க பலம்பெறுகிறோம்.
எனவே 'புரிந்துகொள்ளல்' எனும் இந்த கொடைக்காக இறைவனை வேண்டுவது மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. இந்த கொடைவழியாக தூய ஆவியானவர் நம் இதயங்கள் மற்றும் மனங்களின் இருளை அகற்றுகிறார், நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார், வளம் நிரம்பிய இறைவார்த்தைகளையும் மீட்பு குறித்த அதன் வாக்குறுதிகளையும் ருசிக்க நமக்கு உதவுகிறார்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.