2014-04-29 18:01:41

ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிக்க, வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம், கர்தினால் டர்க்ஸன்


ஏப். 29,2014. ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான சிறந்த வழி, அனைவருக்கும் தரமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி தருவதேயாகும் என இச்செவ்வாய்க்கிழமையன்று உரோம் கருத்தரங்கில் உரையாற்றினார் கர்தினால் பீட்டர் டர்க்ஸன்.
அரசு சாரா கத்தோலிக்க அமைப்புக்கள், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து உரோம் நகரில் ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் டர்க்ஸன், தொழில்புரட்சி, உலகமயமாக்கல் என பல்வேறு வளர்ச்சிகள் இவ்வுலகில் காணப்பட்டாலும், பல கோடிக்கணக்கானோர் ஏழ்மையில் வாடுவதும் அதிகரித்து வருகிறது என்ற கவலையை வெளியிட்டர்.
வேலைவாய்ப்பின்மை, தகுதிக்கேற்ற வேலையின்மை போன்றவைகளால் மக்கள் துன்புறுவது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட கர்தினால், பணம் என்பதை மையமாக வைத்தே பொருளாதார அமைப்பு முறை இயங்கிவருவதே இதற்கு காரணம் என்பதை உணர்ந்துள்ள நாம், நீதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் பிறிதொரு அணுகுமுறையை கைக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
வேலைவாய்ப்பின்மைகள், கல்வி மற்றும் நல ஆதரவு நடவடிக்கைகளிலும் கொண்டிருக்கும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத்தலைவர் கர்தினால் டர்க்ஸன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டவேண்டிய அக்கறை குறித்தும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.