2014-04-29 17:59:40

அமைதியிலும் மன்னிப்பிலும் ஏழ்மை உணர்விலும் சிறந்து விளங்க திருத்தந்தை அழைப்பு


ஏப். 29,2014. ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் அமைதியிலும் மன்னிப்பதிலும், ஏழ்மை உணர்விலும் சிறந்து விளங்கியதைபோல் நாமும் வாழவேண்டும் என்ற அழைப்புடன் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலக் கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரைப்பற்றி பொறாமைக் கொள்ளாமல், புறம்பேசாமல், பெயரைக் கெடுக்காமல் வாழ்ந்தமையால் அங்கு அமைதி நிலவியது என, தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ், அன்பே அனைத்தையும் ஆட்சி புரிந்ததால் மன்னிப்பு என்பது அங்கு எளிதாக இருந்தது என்றார்.
எளிமை உள்ளம் கொண்டவர்களாக, தாழ்ச்சியுடையவர்களாக இருக்கும்போது அங்கு அதிகாரத்திற்கான போட்டியோ பொறாமையோ இல்லை, ஏனெனில் போட்டியும் பொறாமையும் இயேசுவின் பாதைக்கு உகந்ததல்ல, எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உண்மையில் உயிர்த்தார் என நம்பும் கிறிஸ்தவ சமூகங்கள், ஏழ்மை உணர்வைக் கொண்டவர்களாக, ஏழைகள்பால் கருணைக் காட்டுபவர்களாகச் செயல்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.