2014-04-27 14:17:58

புனிதர் பட்டமளிப்புத் திருவிழாவில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மறையுரை - இருபதாம் நூற்றாண்டின் துயரங்கள் மத்தியில் வாழ்ந்தாலும், அவற்றால் வீழ்த்தப்படாத புனிதர்கள்


ஏப்.27,2014. ஏப்ரல் 27, இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் உரோம் நேரம் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றத் திருப்பலியில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். இத்திருப்பலியில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கலந்துகொண்டார். வாழும் இரு திருத்தந்தையர் பங்கேற்ற திருப்பலியில், மறைந்த இரு திருத்தந்தையர் புனிதர்களாக உயர்த்தப்பட்டது, திருஅவை வரலாற்றில் இதுவரை நிகழாத தனித்துவமிக்கதொரு தருணம். புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:

உயிர்ப்புப் பெருவிழாவின் எண்கிழமையை நிறைவுசெய்யும் இஞ்ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறென அர்ப்பணிக்க விழைந்தவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள். இந்த ஞாயிறின் இதயமாக விளங்குவது உயிர்த்த இயேசுவின் உன்னதமான காயங்கள்.
இக்காயங்களை, இயேசு தன் சீடர்களுக்கு உயிர்த்த ஞாயிறன்றே காட்டினார். ஆனால், தோமா அவர்களுடன் அன்று இல்லாததால், அவர், தான் அக்காயங்களை நேரடியாகக் காணாமல் நம்பப்போவதில்லை என்று கூறினார். அடுத்தவாரம் அந்த மேலறையில் மீண்டும் தோன்றிய இயேசு, தன் காயங்களைத் தொடும்படி தோமாவை அழைத்தார். அனைத்தையும் நேரடியாக ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்ட அம்மனிதரோ, இயேசுவின் முன், "என் ஆண்டவரே, என் கடவுளே!" (யோவான் 20:28) என்ற வார்த்தைகளுடன் மண்டியிட்டார்.
இயேசுவின் காயங்கள் ஓர் இடறலாக உள்ளன; நம் நம்பிக்கைக்குத் தடையாக, சோதனையாக உள்ளன. உயிர்த்த இயேசுவின் உடலில் இக்காயங்கள் நீங்காமல் தங்கியுள்ளன. கடவுளின் அன்பை நமக்குப் பறைசாற்றும் வகையில் அவை தங்கியுள்ளன.
23ம் ஜான், 2ம் ஜான்பால் இருவரும் இயேசுவின் காயங்களைக் காணவும், அவற்றைத் தொடவும் தயங்கவில்லை. கிறிஸ்துவின் உடலைக் கண்டு அவர்கள் வெட்கமடையவில்லை; சிலுவையைக் கண்டு அவர்கள் இடறல்படவில்லை. துன்புற்ற இயேசுவில் அவர்கள் இருவரும் துன்புறும் மக்களைக் கண்டனர்.
அவர்கள் இருவரும் இருபதாம் நூற்றாண்டின் அருள் பணியாளர்களாக, ஆயர்களாக, திருத்தந்தையராக விளங்கினர். இருபதாம் நூற்றாண்டின் துயரங்கள் மத்தியில் அவர்கள் வாழ்ந்தாலும், அவற்றால் வீழ்த்தப்படவில்லை. அவர்களைப் பொருத்தவரை, அத்துயரங்களைவிட கடவுள் வலிமை மிக்கவர்; நம்பிக்கை வலிமை மிக்கது. தன் காயங்கள் வழியே, மீட்பர் கிறிஸ்து காட்டிய இரக்கம் அத்துயரங்களைவிட வலிமை மிக்கது. அன்னைமரியாவின் துணையும் வலிமை மிக்கது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தவர்கள்.
கிறிஸ்துவின் காயங்களை ஏறெடுத்து நோக்கிய இவ்விருவரும் வாழ்விக்கும் நம்பிக்கைக்கும், விவரிக்க இயலாத மகிழ்வுக்கும் சான்றுகளாக வாழ்ந்தனர். தங்களையே முற்றிலும் மறுத்து, துன்பம் என்ற கிண்ணத்தின் கசப்பான இறுதித் துளிவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை உயிர்ப்பின் மகிழ்வு தருகிறது.
இந்த மகிழ்வு, துவக்கக் கால கிறிஸ்தவர்கள் குழுமத்தில் தெளிவாகத் தெரிந்தது. அந்த ஆரம்பக் கால அனுபவத்தை, இரண்டாம் வத்திக்கான் சங்கம் நமக்கு மீண்டும் கொணர்ந்தது.
23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் தூய ஆவியாருடன் முழுமையாக ஒத்துழைத்து, திருஅவையில் புத்துணர்வைக் கொணர்ந்தனர்.
திருஅவையின் அடிப்படையான, அழகான அம்சங்களை உலகிற்கு வெளிப்படுத்துபவர்கள் புனிதர்களே. அவர்கள்தான் திருஅவை செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டிகள்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியதன் வழியாக 23ம் ஜான் அவர்கள், தூய ஆவியாருக்குத் தன்னையே முற்றிலும் ஒப்படைத்தவர் என்பதை உலகறியச் செய்தார். திருஅவையின் மெய்யான மேய்ப்பராக, பணியாளர் தலைமைத்துவம் கொண்டவராக அவர் விளங்கினார். தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு முற்றிலும் திறந்தமனம் கொண்ட திருத்தந்தையாக அவர் வாழ்ந்தது, இவ்வுலகிற்கு அவர் தந்த மிகப் பெரும் சாட்சி.
இறைமக்களுக்கு ஓய்வின்றி உழைத்த 2ம் ஜான்பால் அவர்கள், குடும்பங்களின் திருத்தந்தை என்று தன்னை அடையாளம் காட்டினார். 'குடும்பங்களின் திருத்தந்தை' என்று மக்கள் தன்னை நினைவுகூரவேண்டும் என்பதே தன் விருப்பம் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார்.
குடும்பங்களில் புத்துணர்வை உருவாக்க, ஆயர்கள் சிறப்பு மாமன்றம் அழைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், விண்ணிலிருந்து இம்முயற்சிகளை வழிநடத்துவார்.
குடும்பத்தை மையப்படுத்திய சிறப்பு மாமன்றமும், திருஅவை முழுவதும், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு திறந்த மனம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, இவ்விரு புதியப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம். கிறிஸ்துவின் காயங்களால் இடறல்படாமல், இறை இரக்கத்தின் பேருண்மையில் இன்னும் ஆழமாகப் பங்கேற்கவும், இறை இரக்கத்தின் துணையோடு, மன்னிக்கும் மனதையும், நம்பிக்கை கொண்ட மனதையும் நாம் அனைவரும் பெறுவதற்கு, புதியப் புனிதர்கள் இருவரும் நமக்குக் கற்றுத் தருவார்களாக!

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, பலருக்கு தன் நன்றியையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவை ஏற்பாடு செய்த உரோம் நகராட்சி, தன்னார்வத் தொண்டர்கள், ஆகியோருக்குச் சிறப்பு நன்றி கூறியத் திருத்தந்தை, புனித 23ம் ஜான் பிறந்த ஊரான Bergamo விலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் மற்றும் புனித 2ம் ஜான்பால் பிறந்த போலந்தின் கிரக்கோவியாவிலிருந்து வந்திருந்தத் திருப்பயணிகள் ஆகியோருக்குச் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.
இறுதியில் அனைவரோடும் இணைந்து, அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தைச் செபித்தத் திருத்தந்தை, மீண்டும் ஒருமுறை முன்னாள் திருத்தந்தையைச் சந்தித்து, இருவரும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
திருப்பலியின் இறுதியில், வந்திருந்த அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாகச் சந்தித்தபின், தன் வாகனத்தில் ஏறி, கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நடுவே வலம்வந்து, அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.