2014-04-27 14:50:45

புதிய புனிதர் : புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்


1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், தனது 9வது வயதில், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். அவரது ஒரே உடன்பிறப்பான அண்ணன் எட்மண்ட் இறந்தபோது இவருக்கு வயது 12. இவரது வாலிப வயதில் தந்தையும் இறந்தார். இளவயதிலே யாரும் இல்லாத அனாதையானார். கால்பந்து விளையாட்டு வீரராகிய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பனிச்சறுக்கு, நீச்சல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். மேடை நாடகத்திலும், கவிதை எழுதுவதிலும் திறம்படைத்த இவர், 1938ம் ஆண்டில் போலந்தின் கிராக்கோவ் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் ஜெர்மனியின் நாத்சிப் படைகள் போலந்தை ஆக்ரமித்ததால் படிப்பைக் கைவிட்டார். பகலில் நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்கள் போட்டார். கல் உடைக்கும் குவாரிகளிலும், வேதியத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்தார். குருவாக வேண்டுமென்ற ஆவலில் கிராக்கோவ் பேராயர் நடத்திய இரகசிய குருத்துவக் கல்லூரியில் படித்தார். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ல் கத்தோலிக்கத் திருஅவையின் 264வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 455 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தாலியரல்லாத ஒருவர் திருத்தந்தையான பெருமையைப் பெற்றார்.
வெள்ளை மாளிகைக்கு முதலில் சென்ற திருத்தந்தை, யூதர்களின் தொழுகைக்கூடத்துக்குச் சென்ற நவீனகால முதல் திருத்தந்தை, கியூப கம்யூனிச நாட்டுக்குச் சென்ற முதல் திருத்தந்தை, 450 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனோடு திருப்பீடத்தில் மீண்டும் அரசியல் உறவை உருவாக்கியவர், 1867ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் முறிந்துபோயிருந்த அரசியல் உறவை மீண்டும் 1984ம் ஆண்டு சனவரியில் ஏற்படுத்தியவர், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றோடு அரசியல் உறவை உருவாக்கியவர், 483 பேரைப் புனிதர்களாகவும், 1,340 பேரை முத்திப்பேறுபெற்றவர்களாகவும் உயர்த்தியவர், 232 கர்தினால்களை நியமித்தவர், 129 நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருப்பவர், 12 மொழிகளைக் கற்றிருந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் யூதர்கள், கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள், பெண்கள், ஏழைகள், சிறிபான்மையினர் போன்றோரை திருஅவை தவறாக நடத்தியதற்காக, 2000மாம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மன்னிப்புக் கேட்டவர், 25 ஆண்டுகள் 5 மாதங்கள் திருஅவையை வழிநடத்தியவர்... இப்படி பல புகழுக்கு உரியவர் திருத்தந்தை 2ம் ஜான பால். மரண தண்டனை சட்டத்தை, மனித உரிமை மீறல்களைக் கடுமையாய் எதிர்த்தவர். சமூக நீதிக்காவும், நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மன்னிப்புக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்தவர், 14 அப்போஸ்தலிக்கத் திருமடல்களை எழுதியிருப்பவர், உலகின் துன்பங்கள் பற்றிப் பேசியவர், துன்புறும் மக்கள் சார்பாகக் குரல்கொடுத்தவர். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். 2005 ஏப்ரல் 2ம் நாள் இவர் இறந்த பின்னர் இவரிடம் செபித்த பலர் உடலிலும் உள்ளத்திலும் குணமடைந்துள்ளனர். பார்க்கின்சன் நோயால் இறந்துகொண்டிருந்த ப்ரெஞ்ச் அருள்சகோதரி Marie Simon-Pierre Normand அற்புதமாய் குணமடைந்துள்ளார். மூளைத் தடுமாற்றத்தில் துன்புற்ற 50 வயதுப் பெண் இவரிடம் செபித்துக் குணமடைந்துள்ளார்.



புனித திருத்தந்தை 2ம் ஜான் பவுல் அவர்கள் சொன்ன சில பொன்மொழிகள் இதோ:

குடும்பம் எப்படிச் செல்கின்றதோ அப்படியேதான் நாடும் செல்லும். அவ்வாறே நாம் வாழும் முழு உலகமும் இருக்கும்.

இன்பம், வசதி, சுதந்திரம் ஆகியவற்றைத் தெய்வங்களாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு சமுதாயத்தின் மத்தியில் மக்கள் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டு தன்னலமாக மாறுவதே குடும்ப வாழ்வுக்குப் பெரிய ஆபத்து.

ஒருபோதும் போர் வேண்டாம். வெறுப்பும் சகிப்பற்றதன்மையும் மீண்டும் ஒருபோதும் வேண்டாம். 20ம் நூற்றாண்டு நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது.

ஒளி மங்கத் தொடங்கும்போது அல்லது முழுவதும் மறையும்போது நாம் பொருள்களை உள்ளது உள்ளபடி பார்க்க முடியாது.
ஒரு சிறிய ஒளியும் இரவின் இருளை அகற்றிவிடும்.
மனிதர் மகிழ்ச்சியாக இருக்கவே படைக்கப்பட்டனர்.
உண்மையான மகிழ்ச்சி வெற்றியாகும். இதனை நீண்ட மற்றும் இன்னலான போராட்டமின்றி அடைய முடியாது.

மனிதர் அன்பின்றி வாழ முடியாது. அன்பில்லாமல் வாழ்பவர் தனக்கே புரியாத மனிதராக இருப்பார். ஒருவருக்கு அன்பு கிடைக்காவிட்டால், ஒருவர் அன்பை அனுபவிக்காவிட்டால் அவரது வாழ்வு அர்த்தமற்றதாக அமையும்.

திருத்தந்தை புனிதர் 2ம் ஜான் பவுலின் அவர்களின் வழிகாட்டல்கள் நம் வாழ்வை வழிநடத்தட்டும்








All the contents on this site are copyrighted ©.