2014-04-27 14:45:36

புதிய புனிதர் : புனித திருத்தந்தை 23ம் ஜான்


Angelo Giuseppe Roncalli என்ற இயற்பெயரைக் கொண்ட புனித திருத்தந்தை 23ம் ஜான், இத்தாலியின் Sotto il Monte என்ற ஊரில் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் 1881ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பிறந்தார். 13 சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவர், குடும்பத்தில் பிறந்த முதல் ஆண் குழந்தை மற்றும் நான்காவது குழந்தையாவார்.
1904ம் ஆண்டில் குருவான திருத்தந்தை 23ம் ஜான், பெர்கமோ ஆயருக்குச் செயலராகப் பணியாற்றினார். முதலாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய அரசின் இராணுவத்தில் ஆன்மீகக் குருவாகவும் மருத்துவக் குழுவுக்குப் படுக்கைகளை ஒழுங்குபண்ணுபவராகவும் செயல்பட்டார். இவர், அரசியல் தலைவர்களுடன் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டதால் பல்கேரிய நாட்டுக்கு திருப்பீடத் தூதராக அனுப்பப்பட்டு 10 ஆண்டுகள் பணி செய்தார். பேராயரானபோது "கீழ்ப்படிதலும் அமைதியும்" என்பதைத் தமது விருதுவாக்காக எடுத்துக் கொண்ட இவர், 1934ம் ஆண்டில் துருக்கி மற்றும் கிரீசுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில் ஐரோப்பாவில் அடைக்கலம் தேடியிருந்த 24 ஆயிரம் யூத அகதிகளை ஜெர்மன் தூதுவரின் உதவியுடன், இரகசியமாகக் காப்பாற்றினார். இந்நாடுகளில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1944ம் ஆண்டு பிரான்சுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். 1953ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் இவர்.
1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருஅவையின் 261வது திருத்தந்தையாகத தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை 23ம் ஜான். இவர் வாழ்ந்தபோதே மக்கள் அவரை “Papa Buono” அதாவது நல்ல திருத்தந்தை என்றே அவருக்குத் திருமுழுக்கு அளித்திருந்தார்கள். திருத்தந்தை 23ம் ஜான் பாசமும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.
திருத்தந்தையாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜான் என்ற பெயரைத் தெரிவுசெய்தார். தான் 23ம் ஜான் என்று சொல்லி இதனைத் தேர்ந்தெடுத்ததற்கானக் காரணத்தையும் விளக்கினார். இந்தப் பெயர் எனது தந்தையின் பெயர், நான் திருமுழுக்குப் பெற்ற பங்குக் கோவிலின் பெயர், இன்னும், உலகெங்கும் பல பேராலயங்கள் இப்பெயரில் உள்ளன, அத்துடன் நமது உரோம் லாத்தரன் பசிலிக்காவும் இதே பெயர்தான் என்று சொல்லி இது ஓர் இனிமையான பெயர் என்றார்.
புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 76. 76 வயதில் திருத்தந்தையாகி இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்று பலர் நினைத்தனர். இவர் பாப்பிறையாகப் பணியாற்றிய 5 வருடங்களில் மகத்தான, துணிச்சலான செயல்களைச் செய்துள்ளார்.
இவர் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் உலகில் இடம்பெற்ற பனிப்போர் மற்றும் பிற போர்கள் பற்றிக் கவலைப்பட்டார். அச்சுறுத்தும் பெர்லின் நெருக்கடிநிலையில் ஈடுபட்டிருந்த அனைத்து அரசுகளின் தலைவர்களுக்கும் 1961ம் ஆண்டு செப்டம்பரில் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அல்ஜீரியப் பிரச்சனையில் ஈடுபட்டிருந்த ப்ரெஞ்ச் அரசுக்கும், புரட்சியாளருக்கும் இடையே இடைநிலை வகிப்பதற்கு 1962ம் ஆண்டு ஜூனில் முயற்சித்தார். கியூப ஏவுகணை பிரச்சனையின்போது, 1962ம் ஆண்டில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எப் கென்னடிக்கும், பிரதமர் குருஷேவுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். உலகில் அமைதியை நிலைநாட்ட இவர் எடுத்த அயரா முயற்சிகளைப் பாராட்டி இவருக்கு 1962ம் ஆண்டில் அனைத்துலக Balzan குழு அமைதி விருது வழங்கி பாராட்டியது.
மிகக் குறுகிய நேர முன்னறிவிப்புடன் மருத்துவமனைகள், மருத்துவப் பராமரிப்பு இல்லங்கள், ஏன் சிறைகளுக்குக்கூட சென்றுள்ளார். உரோம் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனை, சாந்தோ ஸ்பிரித்தோ மருத்துவமனை, பின்னர் உரோம் ரெஜினா சேலி மத்திய சிறை போன்றவற்றைப் பார்வையிட்டவர் திருத்தந்தை 23ம் ஜான். 1870ம் ஆண்டுக்குப் பின்னர் உரோம் மறைமாவட்டத்தில் பங்குகளைப் பார்வையிடச் சென்ற முதல் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் ஆவார்.
1962ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டியவர் இவரே. ஆயினும் அப்பொதுச்சங்கம் நிறைவடையும் முன்னர் Pacem in Terris அதாவது உலகில் அமைதி என்ற அப்போஸ்தலிக்கத் திருமடலை எழுதிய இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி 49 நிமிடங்களுக்கு தனது 81வது வயதில் இறைபதம் அடைந்தார். வயிற்றுப் புற்றுநோய் காரணமாக இவர் இறந்தார். இவரின் உடல் ஜூன் 6ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்குக் கீழ் உள்ள பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்சமயம் இவரது உடல் அதே பசிலிக்காவில் தூய ஜெரோம் பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தினமும் எண்ணற்ற மக்கள் அப்பீடத்தின் முன்னர் செபிக்கிறார்கள்.
திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் துன்புறுவோரோடும் ஏழைகளோடும் எப்பொழுதும் நெருக்கமாக இருந்தார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட இவரது சகோதரர்கள் பிறரது பண்ணையில் வேலை செய்தார்கள் எனச் சொல்லப்படுகின்றது. இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது உறவுகளைப் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேற்ற வேண்டுமென நினைத்தது கிடையாது.
இப்புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் சொன்ன சில அறிவுரைகளை நினைவுகூர்வோம்.



நல்ல திருத்தந்தை புனிதர் 23ம் ஜான் அவர்கள்போல் நாமும் வாழ முயற்சிப்போம்.








All the contents on this site are copyrighted ©.